யுனெஸ்கோவின் “உலகப் பாரம்பரியங்களில்” ஒன்றான ஸ்டோன்ஹென்ச்சின் கீழே குகைச்சாலை போடுவது சர்ச்சைக்குரியது.
சுமார் 5000 வருடங்களுக்கு முன்னர் ஏற்படுத்தப்பட்டதாகச் சொல்லப்படும் “ஸ்டோன்ஹென்ச்” என்ற சரித்திர தலம் யுனெஸ்கோவால் “உலகப் பாரம்பரியங்கள்” பட்டியலில் 1986 இல் சேர்க்கப்பட்டது. பிரிட்டனின் ஆரம்பகாலத் தலைவர்களுக்கான ஞாபகச் சின்னம் என்பது முதல் இரகசியச் சக்திகள் கொண்ட இடம் போன்ற ஏகப்பட்ட காரணங்களால் நம்பப்படும் அந்த தலம் வருடாவருடம் சுமார் 80,000 சுற்றுலாப் பயணிகளை ஈர்த்து வரும் உலகப் பிரசித்தி பெற்றதாகும்.
சமீபத்தில் பிரிட்டிஷ் போக்குவரத்து அமைச்சரால் ஏற்றுக்கொள்ளப்பட்ட நெடுஞ்சாலைத் திட்டமொன்றின்படி அதன் கீழாக ஒரு 3.3 கி.மீ சாலை கட்டப்படவிருக்கிறது. அந்த நெடுஞ்சாலைக் கட்டப்படுமானால் ஸ்டோன்ஹென்ச்சின் பிரபலம் குறைந்து அது ஒரு சர்வதேசச் சரித்திர ஞாபகச் சின்னம் என்பதன் அர்த்தம் இழக்கப்படும் என்று எச்சரிக்கப்படுகிறது.
அந்த எச்சரிக்கையை அந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துவரும் அமைப்பு லண்டன் நீதிமன்றத்தில் சட்டபூர்வமாகப் பரிசீலித்தபின்னர் வெளியிட்டிருக்கிறது. 1.7 மில்லியன் பவுண்ட் பெறுமதியான நெடுஞ்சாலைத் திட்டம் கடந்த நவம்பரில் போக்குவரத்து அமைச்சரால் அங்கீகரிக்கப்பட்டது. அந்த முடிவு பிரிட்டிஷ் அமைச்சரவையால் ஏற்றுக்கொள்ளப்படக் காத்திருக்கிறது.
நெடுஞ்சாலைத் திட்டத்தைப் பற்றிய பரிசீலனை செய்யப்பட்டபோது போக்குவரத்து அமைச்சு ஸ்டோன்ஹென்ச்சின் மதிப்பை அந்தத் திட்டம் ஏதாவது பாதிக்குமா என்பது பற்றி ஆராயவில்லை என்று நீதிமன்றத்துக்குச் சென்ற அமைப்பினர் சுட்டிக் காட்டுகிறார்கள். ஒரு சாலை கட்டும்போது அதன் விளைவுகள் பற்றிய பரிசீலனைகளில் சகலவிதமான நோக்குகளும் ஆராயப்படவேண்டும். ஆனால், அதன் சரித்திரப் பிரசித்திக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா என்று ஆராயாததால் அந்தத் திட்டம் சட்டத்துக்கு எதிரானது என்று அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்