எல்லைகளைக் காத்த ஆஸ்ரேலியா எல்லை காப்பவர்களைக் கவனிக்க மறந்ததால் நாடெங்கும் சமூகப் பரவலில் கொவிட் 19.
கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகள், நாட்டுக்குள் வருபவர்களைத் தனிமைப்படுத்துதல், மிகப்பெரிய அளவில் மக்களிடையே பரிசோதனைகள் போன்றவையால் ஆஸ்ரேலியா தனது கொரோனாக் கட்டுப்பாடுகளைப் பெருமளவில் தளர்த்தி மக்களைச் சாதாரண வாழ்வுக்குத் திரும்ப அனுமதித்திருந்தது. ஆயினும், தனிமைப்படுத்துதலில் இருந்து பரவிய தொற்று, எல்லையில் சாரதியாக இருந்தவர் மூலமாகப் பரவிய தொற்று தற்போது ஆஸ்ரேலியாவெங்கும் வியாபித்துவிட்டது.
நடுச்சாமத்தில் விழித்தெழுந்த நிலைமையில் ஆஸ்ரேலியா தனது ஹோட்டல் தனிமைப்படுத்தலில் இருந்த பலவீனத்தால் அங்கிருந்து தொற்றைக் காவியவர் ஒருவரால் மூன்று மாநிலங்களில் அது பரவிவிட்டது. தடுப்பு மருந்து போட்டுக்கொள்ளாத எல்லையில் வேலை செய்த வாடகை வாகனச் சாரதியொருவர் தனது பயணிகளால் தொற்றைக் காவி, தன் வழியில் பலருக்குப் பரப்பிவிட்டதும் தெரியவந்திருக்கிறது. எல்லையில் வேலை செய்பவர்களுக்குக் கடுமையான கட்டுப்பாடுகளில்லாததால் அச்சாரது முகக்கவசம் அணியவுமில்லை, அடிக்கடி தன்னைத் தொற்றுக்காகப் பரிசோதித்துக்கொள்ளவுமில்லை.
பரவியிருக்கும் திரிபு டெல்டா வகையானது என்று தெரியவருகிறது. சிட்னி மிக மோசமாகப் பாதிக்கப்பட்டிருக்கிறது. அதைத் தவிர நாட்டின் பெரும்பாலான நகரங்கள் மீண்டும் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குள் கொண்டுவரப்பட்டிருக்கின்றன. ஒரு வாரத்துக்கு முன்னர் வரை மீண்டும் சுதந்திர வாழ்க்கை ஆரம்பித்த நாட்டின் சுமார் 80 விகிதமானவர்கள் இன்னொரு தடவை பொது முடக்கத்தை அனுபவிக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்