கென்ஸிங்டன் மாளிகையருகில் மறைந்த தாயார் டயானாவின் சிலையைத் திறந்துவைத்தார்கள் ஹரியும், வில்லியமும்.
பாரிஸில் கார் விபத்தில் இறந்துபோன இளவரசி டயானாவின் 60 ம் பிறந்த நாளான ஜூலை 01 இல் அவரது சிலையொன்று திறந்துவைக்கப்பட்டது. 36 வருடங்கள் மட்டுமே வாழ்ந்த இளவரசர் சார்ள்ஸின் மனைவியாக இருந்து ஆகஸ்ட் 1996 இல் இருவரும் விவாகரத்துச் செய்துகொண்டார்கள். 1997 இல் டயானா இறந்தார்.
டயானாவின் சகோதர, சகோதரிகள் சகிதம் வில்லியமும், ஹரியும் ஒரு சிறிய சம்பிரதாய நிகழ்ச்சியில் டயானாவின் சிலையைத் திறந்துவைத்தார்கள்.
“அவரது அன்பு, பலமான சுயம், போன்ற தன்மைகள் அவரை உலகில் பலருக்கு நன்மை செய்யக்கூடிய மனிதராக்கியது. அவருடைய 60 பிறந்த நாளான இன்று நாங்கள் அவரது பிரத்தியேக தன்மைகளை நினைவுகூருகுறோம். அவர் இன்றும் எங்களுடன் வாழ்ந்திருக்கவேண்டும் என்று நாம் ஏங்காத நாட்கள் இல்லை. இந்தச் சிலை உலகத்துக்கு அவர் செய்த நல்லவைகளை ஞாபகப்படுத்தும் சின்னமாக இருக்கும்,” என்று ஹரியும், வில்லியமும் தமது அறிக்கையில் குறிப்பிட்டார்கள்.
டயானா வாழ்ந்த கென்ஸிங்டன் மாளிகையின் வாசலில் அச்சிலை வைக்கப்பட்டது. அதை வடிவமைத்தவர் இயன் ரான்க் – புரோட்லி என்பவராகும். டயானாவுக்கு மிகவும் பிடித்த இடமான அந்த மாளிகையில் வில்லியம் தற்போது தனது குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
சகோதரர்கள் இருவருக்குமிடையே நல்ல உறவு இல்லையென்ற விடயத்தை 2019 இல் ஹரி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றில் தெரிவித்தார். சிலை திறக்கும் நிகழ்ச்சிக்கு முன்னர் அதில் அவ்விருவரும் எப்படிச் சேர்ந்து தோன்றுவார்கள் என்ற கிசுகிசு பரவலாக எழுப்பட்டிருந்தது. நிகழ்ச்சியின்போது அவர்களிருவரும் மகிழ்ச்சியுடன் பழகியதைக் காண முடிந்ததாகப் பத்திரிகைகள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்