“யூரோ 2020 அரையிறுதி மற்றும் கடைசி மோதல்களை வெம்பிளி மைதானத்திலிருந்து மாற்றுங்கள்,” என்கிறார்கள் ஐரோப்பிய அரசியல்வாதிகள்.
லண்டன் வெம்பிளி மைதானத்தில் நடாத்தப்படவிருக்கும் யூரோ 2020 க்கான கடைசி மோதல்கள் ஒவ்வொன்றுக்கும் ‘60,000 பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று போரிஸ்ஜோன்சன் அறிவித்திருக்கிறார். காற்றில் பரவும், வேகமாகப் பரவிக் கடுமையாகத் தாக்கும் டெல்டா திரிபு கொரோனாக் கிருமிகள் அச்சமயத்தில் பார்வையாளர்களிடையே தொற்றி, ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் மீண்டும் கொரோனாத்தொற்று அலையொன்றை உண்டாக்கலாம் என்று அவர்கள் அச்சமடைந்திருக்கிறார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் சூழல் நிர்வாக அதிகாரி பஸ்கால் கன்வின் “அங்கே அத்தனை அதிகமானவர்களை அனுமதிப்பது ஒரு மோசமான முடிவு,” என்று சுட்டிக்காட்டிப் பாராளுமன்றத்துக்கு எழுதியிருக்கிறார். பீட்டர்ஸ்பர்க்கில் நடந்த பின்லாந்து – ரஷ்யா மோதலின்போது கொரோனாக் கட்டுப்பாடுகள் பெருமளவு தளர்த்தப்பட்டு அளவுக்கதிகமானவர்கள் அரங்கத்தில் அனுமதிக்கப்பட்டதன் விளைவே பின்லாந்து விசிறிகள் பின்லாந்துக்குள் கொரோனாத் தொற்றலுடன் வந்து பரவவைத்திருக்கிறார்கள் என்ற விபரம் சுட்டிக்காட்டப்படுகிறது.
ஐரோப்பிய உதைபந்தாட்ட நிர்வாக அமைப்பு வரவிருக்கும் மோதல்களுக்கான அரங்கங்களை மாற்றும் எண்ணமில்லை என்று ஏற்கனவே இதுபற்றி ஜெர்மனி, இத்தாலி போன்ற நாடுகள் கேட்டுக்கொண்டதற்குப் பதிலாகச் சொல்லியிருக்கிறது.
‘மியூனிச்சில் மோதல் நடந்தபோது 14,500 பேர் மட்டுமே முகக்கவசங்களணிந்து அரங்கத்தில் இருக்க அனுமதிக்கப்பட்டார்கள். அவர்கள் ஒவ்வொருவரும் உள்ளே வரமுன் கொவிட் 19 பரிசீலனை செய்து தொற்று இல்லை என்று காட்ட வேண்டியிருந்தது,’ என்பதை ஜேர்மனியின் உள்துறை அமைச்சர் மீண்டும் சுட்டிக் காட்டுகிறார். அத்துடன் பிரிட்டிஷ் அரசும் உதைபந்தாட்டப் போட்டி முக்கியத்தவர்களுக்காகக் கொரோனாக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டது பற்றி விமர்சித்து, மீண்டும் 60,000 பேரை அனுமதிப்பது பற்றிச் சிந்திக்கும்படி கேட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்