வெப்ப அலையால் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் சைப்பிரஸில் வரலாறு காணாத காட்டுத்தீ உயிர்களையும் விழுங்குகிறது.
சனிக்கிழமையன்று சைப்பிரஸின் ஆரம்பித்த காட்டுத்தீ வேகமாகப் பரவிவருகிறது. இதுவரை என்றுமே அந்த நாடு கண்டிராத மோசமான காட்டுத்தீ துரூடொஸ் மலைப்பிராந்தியத்தின் அடிவாரத்திலிருக்கும் நகரங்களை மோசமாகப் பாதித்து வருகிறது. இதுவரை 50 சதுர கி.மீற்றர் பிராந்தியம் எரிந்திருக்கிறது. எட்டுக் கிராம மக்கள் வேறிடங்களுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.
1974 ம் ஆண்டுக்குப் பின்னர் ஏற்பட்டிருக்கும் மிக மோசமான காட்டுத்தீ அழிவு என்று அதை விபரித்திருக்கிறார் ஜனாதிபதி நிக்கோஸ் அனஸ்தாஸியாடெஸ்.
“இந்த மோசமான அழிவில் மாட்டிக்கொள்ளாமல் முடிந்தவரை எல்லோரையும் காப்பாற்றுவோம்,” என்று உறுதிகூறியிருக்கிறார் அவர்.
சைப்பிரஸில் கடந்த சில நாட்களாகவே வெப்பம் 40 செல்சியஸாக இருந்து வருகிறது. அத்துடன் வெம்மையான காற்றும் வீசுகிறது. ஆயினும் தீ எங்கிருந்து ஆரம்பித்தது என்று தெரியவில்லை. 67 வயதான ஒருவர் காட்டுத்தீயை ஆரம்பித்து வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்