புலிட்ஸர் பரிசு பெற்ற இந்தியப் பத்திரிகைப் படப்பிடிப்பாளர் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தானில் கொல்லப்பட்டார்.
ரோய்ட்டர் நிறுவனத்துக்காகப் பணியாற்றிவரும் டேனிஷ் சித்தீக்கி ஆப்கானிஸ்தான் – பாகிஸ்தான் எல்லையில் நடக்கும் போரைப் படமெடுக்கும் சமயத்தில் கொல்லப்பட்டார் என்று ஆப்கானிய இராணுவச் செய்தி தெரிவிக்கிறது. ஸ்பின் போல்டாக் எல்லைக் காவல் நிலையத்தை மீண்டும் கைப்பற்ற ஆப்கானிய இராணுவம் நடாத்திவரும் தலிபான்களுடனான போரின் சமயத்தில் இடையே அகப்பட்ட ஒரு ஆப்கானிய உயரதிகாரியும் டேனிஷ் சித்தீக்கியும் கொல்லப்பட்டதாகத் தெரிகிறது.
ஆப்கானிஸ்தானுக்கான இந்தியத் தூதுவர் பரீட் மாமுண்ட்ஸாய் தான் இரண்டு வாரங்களுக்கு முன்னர் சித்தீக்கியைச் சந்தித்ததாகக் குறிப்பிட்டுத் தனது அனுதாபங்களை அவரது குடும்பத்தினருக்கு டுவீட்டியிருக்கிறார்.
“எனது நண்பர் டேனிஷ் சித்தீக்கி கந்தகாரில் இறந்ததாக நேற்றிரவு தெரியவந்தது. அவர் ஆப்கானிய இராணுவத்தினரைத் தொடர்ந்து கொண்டிருந்தார்,” என்று பரீட் மாமுண்ட்ஸாய் குறிப்பிட்டிருக்கிறார்.
சமீபத்தில் ஆப்கானிய பிரத்தியேக படையினர் தனியே தலிபான்களிடையே அகப்பட்டும் எதிரிகளுடன் போராடிக்கொண்டிருந்த ஆப்கானிய பொலீஸ் ஒருவரைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகளை சித்தீக்கி தொடர்ந்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் ஆப்கான் இராணுவ வாகனங்களைத் தலிபான்கள் ஏவுகணைகளால் தாக்கும் படங்களை எடுத்துப் பிரசுரித்திருந்தார்.
தொலைக்காட்சியில் தனது ஊடகப் பிரவேசத்தைச் செய்த சித்தீக்கி 2010 இல் ரோய்ட்டர் நிறுவனத்தில் படப்பிடிப்பாளராகச் சேர்ந்தார். அவரும் அவருடைய சகா அட்னான் அபிடியும் ரோய்ட்டர் நிறுவனத்துக்காக ரோஹின்யா இன மக்களைப் பற்றி எடுத்த ஆவணப்படம் மூலம் புலிட்ஸர் பரிசைப் பெற்றார்.
ஆப்கானிஸ்தான் போரைத் தவிர, ஈராக் போர், நேபாளில் உண்டாகிய நில நடுக்கத்தின் விளைவுகள், ஹொங்கொங்கில் அரசுக்கு எதிராக நடந்த கலவரங்கள் போன்றவற்றையும் படமெடுத்து வெளியிட்டவர் சித்தீக்கி.
சாள்ஸ் ஜெ. போமன்