வகுப்பில் தொற்று என்றால் இனி ஊசி ஏற்றாத மாணவர் மாத்திரமே வீட்டில் இருந்தவாறு கற்க நேரிடும்.
எதிர்வரும் செப்ரெம்பரில் பாடசாலைகள் மீண்டும் திறக்கப்படும் போது கடைப்பிடிக்கப்படவுள்ள சுகாதார நடைமுறைகளைக் கல்வி அமைச்சர் இன்று வெளியிட்டிருக்கிறார்.
அதன்படி வகுப்பறையில் ஒருவருக்குத் தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி வகுப்பறையில் ஒருவருக்குத்தொற்று உறுதிப்படுத்தப்பட்டால் எத்தகைய விதிமுறைகள் பின்பற்றப்படவேண்டும் என்று விளக்கமளிக்கப்பட்டுள்ளது. கல்லூரி தரத்திலும் (Collèges) உயர் கல்லூரி (lycées) தரத்திலும் கல்விபயிலுகின்ற மாணவர்களுக்கு அவர்களது வகுப்பறைகளில் தொற்று அறியப்பட்டால் தடுப்பூசி ஏற்றாதவர்கள் மட்டுமேவீடுகளில் தொலைவில் இருந்து வகுப்பறைச் செயற்பாடுகளைத் தொடர்வர்.
தடுப்பூசி ஏற்றியோர் தொடர்ந்தும் வகுப்பறைகளில் இருந்து கற்பதற்கு அனுமதிக்கப்படுவர்.தொற்றாளருடன் தொடர்புகொண்டிருந்த காரணத்துக்காக முன்னர் போன்று மாணவர்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட மாட்டார்கள்.
ஊசி ஏற்றாத மாணவர்கள் வீடுகளில் இருந்து கற்கும் காலம் வகுப்பறையில் தொற்று அறியப்பட்ட தினத்தில் இருந்து அடுத்த ஏழு நாட்களாக வரையறுக்கப்பட்டுள்ளது.
ஆனால் சிறிய பிள்ளைகள் கற்கின்ற ஆரம்பப் பாடசாலைகளில்(primaire) வகுப்பறைகளில் ஒருவருக்குத் தொற்றுக் கண்டறியப்பட்டால் முன்னரைப் போன்றே வகுப்புகள் மூடப்படும். உள்ளூர் மட்டத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கை நிலவரத்தின் அடிப்படையில் சகல பாடசாலைகளும்
பச்சை (Niveau 1-Vert) மஞ்சள்(Niveau 2 -Jaune)
செம்மஞ்சள் (Niveau 3 -Orange),சிவப்பு (Niveau 4-Rouge) ஆகிய நான்குதர நிலைகளில் பிரிக்கப்படும்.
இந்த நான்கு வர்ணங்களின் கீழ் வரவிருக்கின்ற பாடசாலைகளில் பின்பற்றப்படவேண்டிய விதிமுறைகள் தொடர்பான விளக்கமான முழு விவரங்களும் கல்வி அமைச்சின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.
மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி பேணல், விளையாட்டு, கன்ரீன் போன்ற பல விடயங்களில் சுகாதார விதிகள் எவ்வாறு பின்பற்றப்படவேண்டும் என்று அதில் விளக்கம் அளிக்கப்பட் டுள்ளது. நாடு முழுவதும் பாடசாலைகளில் அல்லது அவற்றுக்கு மிக அருகில் ஆறாயிரம் முதல் ஏழாயிரம் வரையான தடுப்பூசி ஏற்றும் நிலையங்கள் திறக்கப்படும் என்று கல்வி அமைச்சர் Jean-Michel Blanquer தெரிவித்திருக்கிறார்.
ஓகஸ்ட் 9 ஆம் திகதி அமுலுக்கு வரவிருக்கின்ற சுகாதாரப் பாஸ் விதிகள் பாடசாலைகளில் நடைமுறைப்படுத்தப்படமாட்டாது என்பதை கல்வி அமைச்சர் உறுதிப்படுத்தி உள்ளார்.
குமாரதாஸன். பாரிஸ்.