கொவிட் 19 கிருமியோ, அதற்கெதிரான தடுப்பு மருந்துகளோ மரபணுவில் எவ்வித பதிவுகளையும் செய்யவில்லை.
“Cell Reports” என்ற மருத்துவ சஞ்சிகையில் வெளியிடப்பட்டிருக்கும் ஆஸ்ரேலிய ஆராய்ச்சியொன்றின் விபரங்களின்படி கொவிட் 19 கிருமியோ அல்லது அஸ்ரா செனகா, பைசர் நிறுவனங்களின் தடுப்பு மருந்துகளோ மனிதர்களின் மரபணுக்களில் எவ்வித பதிவையும் செய்யவில்லை.
“எனவே சிலர் பயப்படுவதுபோல, மிரட்டுவது போல கொவிட் 19 தடுப்பு மருந்து மரபணுக்களைப் பாதிக்கிறது என்பது தவறு. பயமின்றி எவரும் தடுப்பு மருந்துகளைப் போட்டுக்கொள்ளலாம்,” என்கிறார்கள் குவீன்ஸ்லாந்துப் பல்கலைக்கழகத்தின் மருத்துவ நிபுணர்கள்.
ஏற்கனவே வெளியிடப்பட்ட ஒரு ஆராய்ச்சி முடிவொன்று கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டவர்களின் மரபணுக்களில் அக்கிருமிகளின் பதிவுகள் இருக்க வாய்ப்புண்டு என்று குறிப்பிட்டிருந்தது. அவ்விபரங்களை ஆராயும் நோக்குடனும் குவீன்ஸ்லாந்துப் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் செயற்பட்டார்கள் என்கிறார் அதில் பங்குபற்றிய நிபுணர் ஜ்யோவ் பால்க்னர். அதற்காக அக்கிருமிகளால் தாக்கப்பட்ட மனித செல்கள் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்டு அதன்பின் மரபணுத் தொடர்புகளில் பரிசோதனைகள் செய்ததில் அக்கிருமிகளின் பாதிப்புக்களெதையும் காணமுடியவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இதே போன்ற ஆராய்ச்சி முடிவொன்று அமெரிக்காவின் இந்தியானா பல்கலைக்கழகமொன்றிலிருந்தும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் வெளியாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. மனித சரித்திரத்தில் உண்டகியிருக்கும் பல தொற்று வியாதிகளுக்குக் காரணமான கிருமிகளின் பாதிப்பு மனித மரபணுக்களில் காணக்கூடியதாக இருக்கிறது. ஆனால், கொவிட் 19 தொற்றை உண்டாக்கும் கிருமியிடம் அந்தத் தன்மை இருக்கவில்லை என்று அவ்வாராய்ச்சி மூலம் தெரியவந்தது.
சாள்ஸ் ஜெ. போமன்