பிரிட்டனுக்கு வர கட்டுப்பாடுகளில் சில நாடுகளுக்கு மாற்றம் – வரும் ஞாயிறு முதல் அமுலுக்கு வரும்
ஜூலை 19 திகதி பிரிட்டன் தனது பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அகற்றியது. அதையடுத்துத் தொடர்ந்தும், பிரிட்டர்கள் எந்தெந்த நாடுகளுக்குச் சென்றால் திரும்பி வரும்போது தனிமைப்படுத்திகொள்ளவேண்டும் என்ற கட்டுப்பாடுகள் அடிக்கடி மாறிக்கொண்டிருக்கின்றன. அம்மாறுதல்களில் ஒன்றாக, இனிமேல் பிரிட்டர்கள் பிரான்ஸிலிருந்து திரும்பினால் தனிமைப்படுத்தவேண்டியதில்லை என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
ஐரோப்பிய நாடுகளெதுக்கும் இரண்டு தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்ட பிரிட்டர்கள் போய்வரலாம். திரும்பியதும் தம்மைத் தனிமைப்படுத்தவேண்டும் என்றிருக்க தம் நாட்டுக்கு வருபவர்களை மட்டும் பிரத்தியேகமாகக் கட்டுப்படுத்திய பிரிட்டன் மீது பிரான்ஸ் அதிருப்தி தெரிவித்து வந்திருந்தது. அந்த நிலையே தற்போது மாறியிருக்கிறது.
பிரிட்டர்கள் பயணித்துவிட்டுத் திரும்பி வந்து தனிமைப்படுத்தத் தேவையில்லை என்ற நாடுகளின் எண்ணிக்கை 29 லிருந்து 36 ஆகியிருக்கிறது. இந்தியா, கத்தார், எமிரேட்ஸ், கத்தார் ஆகிய நாடுகளுக்கும் தடுப்பு மருந்துகளிரண்டையும் பெற்ற பிரிட்டர்கள் பயணித்துவிட்டுத் திரும்பி வந்தால் தனிமைப்படுத்தல் அவசியமில்லை.
அதே சமயத்தில் பல்லாயிரக்கணக்கான பிரிட்டர்கள் ஏற்கனவே சுற்றுலாவிலிருக்கும் நாடான மெக்ஸிகோவுக்குப் போகிறவர்கள் இனிமேல் திரும்பி வரும்போது தடுப்பூசிகள் போட்டிருந்தாலும் அரசின் தனிமைப்படுத்தலில் கட்டணம் கொடுத்துத் தங்கவேண்டியிருக்கும். ஏற்கனவே அங்கே போயிருப்பவர்கள் ஞாயிற்றுக்கிழமைக்குப் பின்னர் திரும்பினால் அவர்களும் கட்டணம் செலுத்தும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.
ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னர் திரும்ப விரும்பும் பயணிகளுக்கு உதவுவதற்காக முடிந்தளவு அதிக விமானங்களை மெக்ஸிகோவிலிருந்து பிரிட்டனுக்குப் பறக்க ஒழுங்குசெய்திருப்பதாக பிரிட்டிஷ் ஏர்வேய்ஸ் அறிவிக்கிறது. அப்பயணிகள் எவ்வித பிரத்தியேக கட்டணமுமின்றித் தமது பயணத் திகதியை இந்த ஞாயிற்றுக்கிழமைக்கு முன்னராக மாற்றிக்கொள்ளலாம்.
அதேசமயம் 1,750 பவுண்டுகளாக இருந்த வயதுவந்தவர்களுக்கான தனிமைப்படுத்தல் மையத்தின் கட்டணம் 2,285 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சாள்ஸ் ஜெ. போமன்