கிரேக்கத்தின் தலைநகரை நோக்கிப் பசியுடன் நெருங்கிக்கொண்டிருக்கின்றன காட்டுத்தீ நாக்குகள்.
நூற்றுக்கணக்கான இடங்களில் தொடர்ந்து பதினொரு நாட்களாக எரிந்துகொண்டிருக்கின்றன கிரீஸ் நாட்டின் காடுகள். அதே நேரம் நாட்டின் பல பகுதிகளைப் பற்றியிருக்கும் கடும் வெப்ப அலையும் தனது கோரப்பிடியை விடுவதாக இல்லை. நாட்டின் தலை நகரான ஏதென்ஸை நோக்கியும் நெருங்கிக்கொண்டிருக்கின்றது காட்டுத் தீ.
ஏதென்ஸுக்கு வெளிப்பக்கத்திலிருக்கும் குடியிருப்புக்கள் சிலவற்றில் சில நாட்களுக்கு முன்னரே காட்டுத்தீ பற்றியது. நூற்றுக்கதிகமான கட்டடங்கள், வீடுகள் தீக்கிரையாகியிருக்கின்றன. நாட்டின் தீயணைக்கும் படைக்கு உதவியாகப் பொலீசாரும் களத்தில் இறங்கி வேலை செய்கிறார்கள். தமது வீடுகளையும், உடமைகளையும் இழந்த பலரை ஹோட்டல்களில் தங்கவைத்திருக்கிறார்கள். விமானங்கள் மூலம் நீரை அள்ளிவந்து நீர்க்குண்டு போடுவதன் மூலம் தீயணைக்கும் முயற்சி தொடர்கிறது. ஆனால், அதில் இதுவரை வெற்றியடைந்திருப்பதாகத் தெரியவில்லை. ஏதென்ஸ் நகருக்கு சுமார் இரண்டு மைல் தூரத்தில் காட்டுத்தீ நெருங்கியிருக்கிறது.
வெள்ளியன்று காலை மேலுமொரு மக்கள் வாழும் பகுதியைக் காட்டுத்தீ தனது பிடிக்குள் கொண்டது. எனவே, அங்கிருந்தும் பலர் வெளியேற்றப்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். சரித்திர காலத்தில் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடந்த இடங்கள் என்று குறிப்பிடப்படும் முக்கிய தலங்களைச் சுற்றியும் தீ எரிந்துகொண்டிருக்கிறது. ஏதென்ஸை நாட்டின் வட பகுதிகளுடன் இணைக்கும் வீதியை மூடி அதைத் தப்பியோடுகிறவர்களைக் கொண்டு செல்வதற்காகப் பாவிப்பதில் தீயணைப்புப் படையினர் ஈடுபட்டு வருகிறார்கள்.
அவர்கள் அவ்வழியைக் காப்பாற்றுவதற்காக நீரைப் பாய்ச்சுவதால் ஒரு பாகம் அணைக்கப்பட அதனால் ஏற்படும் கடும் புகை மூட்டம் தலைநகரை நோக்கிப் படர்ந்துகொண்டிருப்பதாகச் செய்திகள் குறிப்பிடுகின்றன. வடக்கிலிருக்கும் பிரபலமான சுற்றுலாத் தீவான ஏவியாவின் பெரும்பகுதியை தீ தன் பிடியில் வைத்திருக்கிறது. அங்கே கோடை விடுமுறைக்காக வந்தவர்கள் பலரும் பாதுகாப்பான இடங்களுக்கு அகற்றப்பட்டிருக்கிறார்கள். தீயணைக்கும் சேவையிலிருந்த ஒன்பது பேர் தீயால் தாக்கப்பட்ட சுகவீனங்களால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நாட்டின் தென் பகுதியிலும் பல இடங்களில் காட்டுத்தீ பரவிக் கிராமங்களை எரித்து வருகிறது. சுமார் 60 கிராமங்களிலிருந்து மக்களை வேறிடத்துக்கு அகற்றியிருக்கிறார்கள். “என்றுமில்லாத மிகவும் மோசமான ஆபத்தை எங்கள் நாடு எதிர்கொண்டிருக்கிறது,” என்று குறிப்பிடுகிறார் பிரதமர் மிட்ஸொதாக்கிஸ்.
சாள்ஸ் ஜெ. போமன்