நோயாளிகளுக்குப் போதுமான இடங்கள் மருத்துவமனைகளில் இல்லை. சிறீலங்கா கொவிட் 19 கட்டுப்பாடுகள் இறுக்கப்பட்டன.
சிறீலங்கா அரசு வெள்ளியன்று நாட்டின் கொரோனாக் கட்டுப்பாடுகளை மேலும் இறுக்குவாதாக அறிவித்திருக்கிறது. சகலவிதமான அரச விழாக்களும், பொதுமக்கள் கூடலும் செப்டெம்பர் 01 திகதிவரை நடக்கலாகாது என்று அறிவிக்கப்பட்டிருக்கின்றது. நாட்டின் மருத்துவமனைகளில் ஏற்கனவே இடமில்லாத நிலைமையில் வெளியே காத்திருப்பிலேயே கொவிட் 19 நோயாளிகள் இறந்துவிடுவதாகச் செய்திகள் வருகின்றன.
சிறீலங்காவின் தொலைக்காட்சி அறிவிப்பாளர் திலக் ஷாணி மதுவந்தி தனது சமூகவலைத்தளங்களில் கொழும்பிலிருக்கும் களுபோவல மருத்துவமனை நிலையைப் படங்களுடன் விபரித்திருக்கும் காட்சிகள் பலரையும் திகைக்கவைத்திருக்கின்றன.
“இது நடுச்சாமம் 1.20. நான் களுபோவல மருத்துவமனையின் கொவிட் பகுதியில் நிற்கிறேன். இந்தியாவில் நடந்ததாகச் செய்திகளில் வாசித்தது இப்போ எனது கண் முன்னால். விபரங்கள் அதிகம் தெரியாத இரண்டு, மூன்று நோயாளிகள் ஒரு கட்டிலைப் பகிர்ந்திருக்கிறார்கள். கட்டில்களுக்குக் கீழே மேலும் அதிக நோயாளிகளைப் பிராணவாயு கொடுத்துக் காப்பாற்ற முயல்கிறார்கள். நிலத்தில் படுத்திருக்கும் நோயாளிகள் எழுந்து நடக்கப் பயப்படுகிறார்கள். வெளியே நூற்றுக்கணக்கானவர்கள் வாங்கில்களில், கதிரைகளில், மரங்களுக்குக் கீழே காத்திருக்கிறார்கள். மேலும் சிலர் மணல் கும்பங்களில் ….. என் கண் முன்னால் இருவர் விழுந்து இறப்பதைக் காண்கிறேன் ………………………நுழம்புகள் அங்கே குளிர்காற்றில் சுற்றிக்கொண்டிருக்கின்றன…. மிகக் குறைந்த அளவு மருத்துவ சேவையாளர்களே பணியிலிருக்கிறார்கள்…….” என்று அந்தத் தொலைக்காட்சிச் செய்தியாளர் வேதனையுடன் தன் எண்ணங்களைப் பகிர்ந்திருக்கிறார்.
தனியார் கூட்டங்கள் முழுசாக நிறுத்தும் சட்டம் போடப்படவில்லை. கல்யாணங்களுக்கு 150 பேர், அந்திம கிரிகைகளில் 25 பேர் பங்குபற்றலாம்.
4,817 பேர் இதுவரை இறந்திருக்கிறார்கள். தினசரி இறப்பவர்கள் தொகை 80 ஆக இருக்கிறது.சராசரியாக தினசரி 2,500 பேருக்குத் தொற்றுக்கள் உண்டாகின்றன. அது சமீப வாரங்களில் பெருமளவில் அதிகரித்திருப்பதாகத் தெரிகிறது. உண்மையான இறப்புக்களும், தொற்றுக்களும் இந்த இலக்கங்களைவிட பல மடங்குகள் அதிகம் என்று கணிக்கப்படுகிறது.
நாட்டின் 21 மில்லியன் மக்களில் சுமார் 10 மில்லியன் பேருக்கு ஒரு தடுப்பூசியாவது கொடுக்கப்பட்டிருக்கிறது. சுமார் 2,67 மில்லியன் பேருக்கு இரண்டு தடுப்பூசிகளும் கொடுக்கப்பட்டிருக்கின்றன. திங்களன்று முதல் வேலைக்கு வரவேண்டுமென்று பணிக்கப்பட்ட அரச உத்தியோகத்தர்களுக்கான உத்தரவு மீளப்பெறப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்