பிரிட்டிஷ் அரசகுடும்பத்தின் இளவரசர் ஆண்டிரூ, பாலியல் வன்புணர்வுக் குற்றங்களுக்காகக் கூண்டிலேற்றப்படுகிறார்.
பெரும் பணக்காரரான ஜெப்ரி எப்ஸ்டெய்ன் 2019 இல் பாலியல் குற்றங்கள், கடத்தல்கள், விபச்சாரம் போன்றவைக்காகக் கைதுசெய்யப்பட்டபோது அவரது நெருங்கிய வட்டத்திலிருந்த பல உயர்மட்டத்தினர் பற்றியும் விபரங்கள் பல வெளியாகின. எப்ஸ்டெய்னைக் குற்றஞ்சாட்டியவர்கள் அக்குற்றங்கள் நடந்த சந்தர்ப்பங்களில் பங்குபற்றியவர்களையும் அடையாளங்காட்டியதில் பிரிட்டிஷ் அரச குடும்பத்தில் ஒருவரான இளவரசர் ஆண்டிரூவும் அக்குற்றங்களில் கலந்துகொண்டதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
இளவரசர் ஆண்டிரூ தானும் எப்ஸ்டெய்னும் நண்பர்களே என்றும் குற்றங்களில் தான் பங்கெடுக்கவில்லையென்று மறுத்து வருகிறார். வெர்ஜீனியா ஜுப்ரே என்ற பெண்மணி பல தடவைகள் இளவரசர் ஆண்டிரூவும் தன்னை எப்ஸ்டெய்ன் பங்கெடுக்கவைத்த காமக் கேளிக்கைகளில் பங்கெடுத்ததாகப் பகிரங்கமாகக் கூறி வருகிறார்.
அதுபற்றிய விசாரணைகள் நடந்ததில் தற்போது இளவரசர் ஆண்டிரூவின் மேலும் வழக்கு நடக்கவிருப்பதாகத் தெரிகிறது. 2000, 2002 ஆகிய வருடங்களில் வெர்ஜீனியா ஜுப்ரே 17 வயதாக இருந்தபோது குறிப்பிட்ட பாலியல் குற்றங்கள் நடந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
எப்ஸ்டெய்ன் பொலீஸ் காவலில் வைக்கப்பட்டிருந்தபோது அங்கே தற்கொலை செய்துகொண்டார். மிகப் பெரும் பணக்காரரான அவர் பல பெண்களைத் தன்னுடையதும், தனது நண்பர்களுடையவும் காமக் கேளிக்கைகளுக்காகப் பயன்படுத்திவந்ததாக விபரங்கள் வெளியாயின. அவரது நண்பர்கள் வட்டத்தில் முன்னால் ஜனாதிபதிகளான பில் கிளிண்டன், டொனால்ட் டிரம்ப் ஆகியோரும் அடங்கும்.
சாள்ஸ் ஜெ. போமன்