பிரான்ஸுக்குப் பயணிப்பவர்களை எச்சரிக்கையாக இருக்கும்படி வேண்டிக்கொள்கிறது அமெரிக்கா.
நான்காவது அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பிரான்ஸில் பரவி வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. ஏற்கனவே சுமார் 111,000 பேரைக் கொவிட் 19 க்குப் பலிகொடுத்த பிரான்ஸில் தற்போது 20,000 பேருக்கு அவ்வியாதி தினசரி தொற்றிவருவதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இறப்புக்கள் முன்னைய தொற்று அலைகளின் சமயத்திலிருந்ததை விடக் குறைவாகவே இருக்கிறது.
இதுவரை சுமார் 6 மில்லியன் பேர் பிரான்சில் கொவிட் 19 தொற்றுக்கு உள்ளாகியிருக்கிறார்கள். தற்போது பரவிவரும் அக்கொடும் வியாதியின் வேகத்தைக் குறிப்பிட்டு அமெரிக்கா தனது குடிமக்களை “பிரான்ஸுக்குப் பயணிக்காதீர்கள். கட்டாயம் போகவேண்டும் என்ற நிலையிருப்பின் இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றுக்கொள்ளாமல் பயணிக்காதீர்கள்,” என்று வேண்டிக்கொள்கிறது. ஐரோப்பியர்கள் தொடர்ந்தும் அமெரிக்காவுக்குப் பயணிக்க அனுமதி கொடுக்கப்படாவிட்டாலும் அமெரிக்கர்களுக்காக ஐரோப்பிய ஒன்றியத்தின் கதவுகள் திறந்திருக்கின்றன.
பிரான்ஸின் 55 விகிதமான குடிமக்கள் ஏற்கனவே இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றுவிட்டார்கள். அங்கே 74 மில்லியன் தடுப்பூசிகள் இதுவரை கொடுத்து முடிக்கப்பட்டிருப்பதாகப் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. பிரான்சில், பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பங்குபற்றும் பல இடங்களில் கொவிட் 19 தடுப்பூசிச் சான்றிதழ்கள் கட்டாயமாக்கப்பட்டிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்