பிரிட்டனில் A-level பரீட்சை முடிவுகளுக்குப் பின் GCSE பரீட்சை முடிவுகள் வெளிவருகின்றன. விளைவுகள் என்ன?
பிரிட்டனில் ஜனவரியில் நடக்கவேண்டியிருந்த A-level, AS-level, GCSE பரீட்சைகள் நிறுத்தப்பட்டன. அதன் காரணம் கொவிட் 19 வேகமாகப் பரவிக்கொண்டிருந்தது ஆகும். பரீட்சைகளே இல்லாவிட்டாலும் மாணவர்களுடைய A-level தகுதி முடிவுகள் வெளியிடப்பட்டன. அதையடுத்து சுமார் அரை மில்லியன் GCSE மாணவர்களின் தகுதி முடிவுகள் வெளியிடப்படுகின்றன.
பரீட்சைகளின் மதிப்பெண்கள் இல்லாமலேயே அந்த மாணவர்கள் குறிப்பிட்ட வருடத்தில் வகுப்பில் வெவ்வேறு விதங்களில் காட்டிய திறமையை வைத்து ஆசிரியர்கள் அவர்களின் தகுதிகளைக் கணிப்பிட்டே இந்த முடிவுகளுக்கு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் கல்வித்துறை ஒரு பிரச்சினையைத் தீர்த்திருந்தாலும் புதியதாக எழப்போகும் பிரச்சினைகளிலொன்றாக, பெற்றோர்கள் நிரந்தரமாக இதுபோன்ற பரீட்சைகளை நிறுத்தச்சொல்லிக் கோரலாம் என்பதும் ஒன்றாகும்.
வெளிவந்த A-level மாணவர்களின் முடிவுகளின்படி அவர்கள் கடந்த வருடத்தைவிட அதிகளவு A தகுதிகளைப் [ஆகக்கூடிய தகுதி] பெற்றிருக்கிறார்கள்.38.5% மாணவர்கள் 2020 இல் அதைப் பெற்றிருந்தார்கள். பரீட்சைகள் நடக்காத இம்முறை அது 44.8% ஆகியிருக்கிறது. ஆகக்கூடிய தகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும், அதனால் மாணவர்கள் குறைந்த தகுதியைப் பெறுவது அங்கீகரிக்கப்பட்டு அது வழக்கமாகிவிடும், என்று ஏற்கனவே இதுபற்றி எச்சரிக்கப்பட்டிருந்தது.
தமது பிள்ளைகள் அதியுயர் தகுதிகளை பெறுவது பெற்றோர்களைச் சந்தோசப்படுத்தும். ஆனால், பக்க விளைவாக அப்பிள்ளைகள் கல்வியின் அடுத்த தரத்துக்குப் போகும்போது அல்லது வேலைக்குப் போகும்போது அது பிரச்சினையாக மாறுமென்பது கல்வியாளர்கள், நிறுவனங்களினால் சுட்டிக்காட்டப்பட்டது.
GCSE பரீட்சை முடிவுகளிலும் இதேபோன்று மாணவர்களில் அதியுயர் தகுதி பெற்றவர்கள் அதிகமாகியிருப்பார்கள் என்று கருதப்படுகிறது. அது அடுத்த முறையில் பரீட்சைகளில் தோன்றவிருக்கும் மாணவர்களுக்கு ஒரு சவாலாகவும், பிரச்சினையாகவும் ஆகும் என்று கல்வித்துறையினர் கவலைப்படுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்