அடுத்தடுத்த வருடங்களில் கொவிட் 19 இளம் பிள்ளைகளிடையே பரவும் ஒரு வியாதியாக மாறலாம்!
கொவிட் 19 பெருந்தொற்றாக உருவெடுத்த காலம் முதல் அது இளவயதினரிடையே பரவலாகத் தொற்றவில்லை. அவ்வியாதி இளவயதினரைக் கடுமையாகத் தாக்கவும் இல்லை. அந்தக் கிருமிப் பரவலையும், அதன் விளைவுகளையும் ஒன்றுபடுத்தி அது அடுத்தடுத்த வருடங்களில் எப்படிச் செயற்படும் என்று அமெரிக்க – நோர்வீஜிய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கணித்திருக்கிறார்கள்.
அவர்களுடைய கணிப்புச் சரியாக இருக்கும் பட்சத்தில் அவ்வியாதி அடுத்தடுத்த வருடங்களில், இளவயது பிள்ளைகளிடையே அவ்வப்போது தோன்றும் ஜலதோஷம் போன்று ஆங்காங்கே பரவும். “தற்போது வயதுக்கு வந்தவர்களே அதற்கான தடுப்பு மருந்துகளைப் பெற்றுக்கொள்வதால் அவ்வியாதி தடுப்பு மருந்துகளைப் பெற்றிராத, அக்கிருமிகளுடன் தொடர்பு கொள்ளும் வயதுகுறைந்தவர்களைத் தாக்கும்,” என்கிறார் நோர்வேயின் ஒஸ்லோ பல்கலைக்கழக மருத்துவ ஆரய்ச்சியாளர் ஒத்தார் பியோர்ன்ஸ்டாட்.
சரித்திர ரீதியில் மனிதர்களைத் தாக்கிய சுவாசத்துடன் சம்பந்தப்பட்ட வியாதிகளை ஆராய்ந்தே மேற்கண்ட ஆராய்ச்சி எதிர்காலத்தில் கொவிட் 19 எப்படியான தாக்கங்களை மனிதர்களிடையே உருவாக்கும் என்பதை மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கணிக்க முயன்றிருக்கிறார்கள். சீனா, ஜப்பான், தென் கொரியா, ஸ்பெய்ன், ஐ.ராச்சியம், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, பிரேசில் ஆகிய நாடுகளில் கொவிட் 19 இன் பாதிப்பு வெவ்வேறு வயதினரிடையே எப்படியான பாதிப்புக்களைக் கொடுத்தது என்ற புள்ளிவிபரங்கள் இக்கணிப்பிற்கு உதவியிருக்கின்றன.
இந்த ஆராய்ச்சியின்படி கொவிட் 19 ஆல் பாதிக்கப்பட்டுப் பெற்றுக்கொள்ளப்படும் அவ்வியாதிக்கான எதிர்ப்புச் சக்தியை விடப் பலமான எதிர்ப்புச் சக்தியைக் கொடுக்கிறது கொவிட் 19 தடுப்பு மருந்துகள். எனவே, எல்லோரையும் முடிந்தளவு வேகமாகத் தடுப்பு மருந்தைப் பெற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறார்கள் ஆராய்வாளர்கள்.
நீண்டகால நோக்கில் கவனிக்கும்போது வயதுக்கு வந்தவர்கள் தடுப்பு மருந்துகள் போட்டுக்கொண்ட பின்னரும் மீண்டும், மீண்டும் லேசான பாதிப்புக்கு உள்படுத்தப்பட்டு அவ்வியாதிக்கெதிரான எதிர்ப்புச் சக்தியை உடலில் பெற்றுக்கொள்வார்கள். ஆனால், இளவயதினரில் பலர் பெருமளவில் தொற்றினால் பாதிக்கப்படுவார்கள் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்