பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையேயும் ஜப்பானிலும் கொரோனாத் தொற்றுக்கள் அதிவேகமாகப் பரவுகின்றன.
ஜப்பானில் மீண்டுமொரு அலையாகக் கொரோனாத் தொற்றுக்கள் பரவிவருகின்றன. ஆரம்பிக்க இரண்டு நாட்களே இருக்கும் சமயத்தில் பாராஒலிம்பிக்ஸ் போட்டியாளர்களிடையே பலருக்கும் தொற்றுக்கள் உண்டாகியிருப்பதாக அறிவிக்கப்படுகிறது. ஜூலை 1 ம் திகதி முதல் ஒலிம்பிக்ஸ் கிராமத்துக்குள் 547 கொரோனாத் தொற்றுக்கள் பதியப்பட்டன. பாராஒலிம்பிக்ஸ் வீரர்களிடையே 131 தொற்றுக்கள் ஏற்கனவே உண்டாகியிருக்கிறது.
ஜப்பானிலோ சமீப வாரங்களில் தினசரி 25,000 பேர் கொரோனாத் தொற்றுக்களுக்கு உண்டாகிறார்கள். டோக்கியோ உட்பட்ட பல நகரங்களில் கடுமையான கொரோனாக் கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றன.
பாராஒலிம்பிக்ஸ் வீரர்களும் மற்றப் போட்டியாளர்களைப் போல முகக்கவசம் அணிதல், தினசரி கொரோனாத் தொற்றுப் பரிசோதனை மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகளுக்கு உள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் நிலைமை மோசமாகி வருவதை முன்னர் இருந்ததை விடக் கடுமையான கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கின்றன. அவர்கள் அங்கே வந்து பரிசோதனைகள் செய்து 14 நாட்கள் கழிந்தபின் டோக்கியோ பொதுப் போக்குவரத்தில் பயணிப்பது, சுதந்திரமாக நடமாடுவது ஆகியவை நிறுத்தப்பட்டிருக்கின்றன. தேவையானால் மேலும் கட்டுப்பாடுகளை இறுக்கவிருப்பதாக ஒலிம்பிக்ஸ் அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள்.
ஜப்பானில் சுமார் 15,500 பேர் கொரோனாவுக்குப் பலியாகியிருக்கிறார்கள். சுமார் 40 விகித குடிமக்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்