மூன்றாவது தடுப்பூசியின் 10 நாட்களுக்குப் பின்னர் கொவிட் 19 க்கெதிரான சக்தி 4 மடங்கால் அதிகரிக்கிறது.
பைசர் பயோன்டெக் நிறுவனத்தின் இரண்டு தடுப்பூசிகளை மட்டுமே நாட்டில் கொடுத்து மக்களிடையே பெருமளவில் பரவி, உயிர்களைக் குடித்துவந்த கொவிட் 19 ஐக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்த முதல் நாடு இஸ்ராயேல் எனலாம். அதனால், அத் தடுப்பு மருந்தின் விளைவுகள் பற்றிய புள்ளிவிபரங்களைப் பாவித்துப் பரவலாக ஆராய்வுகள் வெளியாகியிருக்கின்றன.
இரண்டு தடுப்பு மருந்துகளையும் பெற்றிருந்தாலும் அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொவிட் 19 பரவல் அதிகமாக இருப்பதை இஸ்ராயேல் கவனித்தது. அதனால், அவர்கள் பைசர் நிறுவனத்துடன் மீண்டும் செய்துகொண்ட ஒப்பந்தத்தின்படி வேகமாக மேலுமொரு தடுப்பூசியைத் தனது நாட்டு மக்களுக்காகக் கொள்வனவு செய்ய முடிந்தது.
பலவீனமானவர்களும், அறுபது வயதுக்கு மேற்பட்டவர்களும் இடையே கொரோனாக் கிருமிகளுக்கெதிரான மூன்றாவது தடுப்பூசியின் விளைவு என்னவென்று தெரிந்துகொள்ளும் ஆராய்ச்சியிலும் இறங்கியிருந்தது இஸ்ராயேலின் மக்கள் ஆரோக்கிய அமைச்சு. அதற்காக 60 வயதுக்கு மேற்பட்டவர்களில் இரண்டு தடுப்பூசிகள் மட்டும் பெற்றோர் மற்றும் மூன்றாவதையும் பெற்றோரிடையே ஏற்பட்டிருக்கும் வித்தியாசங்கள் கவனிக்கப்பட்டன, மதிப்பீடு செய்யப்பட்டன.
தமது நாட்டுப் புள்ளிவிபரங்களை வைத்து நடாத்தப்பட்ட ஆராய்ச்சியின் ஒரு பகுதி முடிவுகளை ஞாயிறன்று பத்திரிகையாளர்கள் சந்திப்பில் வெளியிட்டிருந்தார்கள். அதன்படி 60 வயதுக்கு மேலானவர்கள் மூன்றாம் தடுப்பூசி பெற்ற பத்தாவது நாட்களுக்குப் பின்னர் முன்னரை விட நான்கு மடங்கு அதிகம் கொவிட் 19 க்கு எதிரான சக்தியைப் பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது. 1.3 மில்லியன் இஸ்ராயேலியர்கள் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றிருக்கிறார்கள்.
அமெரிக்காவும் தனது குடிமக்களில் இரண்டு தடுப்பூசி பெற்றவர்கள் எட்டு மாதங்கள் கடந்தபின் மூன்றாவது தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவித்து அதை 60 வயதுக்கு மேற்பட்டவர்களிடையே கொடுக்க ஆரம்பித்திருக்கிறது. ஜேர்மனி, பிரான்ஸ், கனடா ஆகிய நாடுகளும் தமது குடிமக்களுக்கு மூன்றாவது தடுப்பூசி கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்