அல்ஜீரியக் காட்டுத்தீக்கள், அவர்களை மொரொக்கோவுடனான தொடர்புகளைத் துண்டிக்க வைத்திருக்கிறது.
செவ்வாயன்று முதல் மொரொக்கோவிடனான ராஜதந்திர உறவுகளை வெட்டிக்கொண்டதாக அல்ஜிரியா அறிவித்திருக்கிறது. இரண்டு நாடுகளிலிருக்கும் தூதுவராலயங்கள் வழக்கம்போலத் திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. மொரொக்கோ தமது நாட்டுக்கு எதிரான செயல்களில் ஈடுபட்டு வருவதே எடுக்கப்பட்ட முடிவுக்குக் காரணம் என்று அல்ஜீரிய வெளிவிவகார அமைச்சர் ரம்டானே லமம்ரா சொல்லியிருக்கிறார்.
அல்ஜீரியாவுக்கும், மொரொக்கோவுக்குமிடையே நீண்ட காலமாகவே பிளவுகள் இருந்து வருகின்றன. தற்போதைய முடிவுக்கான காரணமாக அல்ஜீரியா தனது நாட்டில் சமீபத்தில் ஏற்பட்ட காட்டுத்தீக்களுக்குப் பின்னணியிலிருந்தது மொரொக்கோவும், இஸ்ராயேலும் என்று குறிப்பிடுவதாகும்.
மொத்தமாக 90 உயிர்களைக் குடித்த அக்காட்டுத்தீக்களை உண்டாக்கியவர்கள் என்று 22 பேரை அல்ஜீரியா கைது செய்திருக்கிறது. அவர்கள் அல்ஜீரிய அரசால் தீவிரவாதிகள் என்று தடைசெய்யப்பட்ட இரண்டு குழுவினருக்காக இயங்குபவர்கள் என்கிறது அல்ஜீரிய அரசு. ஒன்று, அத்தீக்கள் உண்டாகிய கபில்லே பிராந்தியத்தில் வாழும் மக்களின் சுயாட்சிப் போராட்ட அமைப்பான Movement for the self-determination of Kabylie ஆகும். இரண்டாவதாக ரஷாட் குழு என்ற இன்னொரு குழுவாகும்.
அவர்களில் Movement for the self-determination of Kabylie அமைப்பினர்மொரொக்கோவுடன் மட்டுமன்றி ஸியோனிஸ்டுகளுடனும் தொடர்புள்ளவர்கள் என்று அல்ஜீரியா குற்றஞ்சாட்டுகிறது. இஸ்ராயேலை ஒரு நாடாக அங்கீகரிக்க மறுத்துவரும் அல்ஜீரியா அவர்களை “ஸியோனிஸ்ட் அமைப்பு” என்றே குறிப்பிடுவது வழக்கம். சமீபத்தில் இஸ்ராயேலுடன் தமது உறவுகளை இணைத்திருக்கும் மொரொக்கோவின் நடப்பையும் அல்ஜீரியா விரும்பவில்லை. அல்ஜீரிய – மொரொக்கோ எல்லைகள் 1994 முதல் மூடப்பட்டிருக்கின்றன.
மொரொக்கோவின் அரசர் VI அல்ஜீரியாவுடன் நல்லுறவை ஏற்படுத்தவேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார். மேற்கொண்டு மொரொக்கோ அரசிடமிருந்து எவ்வித அறிக்கைகளும் இதுபற்றி வெளியாகவில்லை.
சாள்ஸ் ஜெ.போமன்