துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகளின் கடவுச்சீட்டுக்களை ரத்து செய்யப்போவதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசு அறிவித்திருக்கிறது.
துருக்கிய – சைப்பிரஸ் அதிகாரிகள் கிரேக்க – சைப்பிரஸ் அரசுக்கெதிரான நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதாலேயே குறிப்பிட்ட முடிவை எடுக்கவேண்டிய நிலைக்குள்ளானதாக கிரேக்க – சைப்பிரஸ் அரசின் பேச்சாளர் தெரிவித்தார். அதற்கான காரணம் குறிப்பிட்ட அதிகாரிகள் கைவிடப்பட்ட நகரமான வரோஷாவை மீண்டும் பாவனைக்கு உட்படுத்தும் திட்டங்களில் ஈடுபடுவதாக அவர் குறிப்பிட்டார்.
1974 வரை சுற்றுலாப் பயணிகளிடையே பிரசித்தி பெற்றிருந்த வரோஷா அவ்வருடத்தில் நடந்த துருக்கியரின் வடக்கு சைப்பிரஸ் கைப்பற்றலை அடுத்து முழுவதுமாகக் கைவிடப்பட்டது. தற்போது மனித நடமாட்டமின்றி வெறிச்சோறியிருக்கும் வரோஷா பற்றிய பிரச்சினை ஐ-நா வரை எட்டியிருப்பதால் அதை குடியிருப்பாக மாற்றுவது தொடர்ந்தும் சர்ச்சைக்குள்ளானதாகவே இருந்து வருகிறது.
மத்தியதரைக்கடல் பிராந்தியத்திலிருக்கும் தீவான சைப்பிரஸ் துருக்கியின் அத்துமீறிய உள் நுழைதலின் பின்னர் வட சைப்பிரஸ், தென் சைப்பிரஸ் என்று இரண்டாகப் பிரிக்கப்பட்டது. தென் பகுதி சர்வதேச அங்கீகாரம் பெற்றிருக்க வட சைப்பிரஸ் முழுவதும் துருக்கியின் ஆட்சிக்குக் கீழ் உட்படுத்தப்பட்டிருக்கிறது. அவைகளிரண்டையும் ஒன்றுபடுத்தும் பல முயற்சிகள் எடுக்கப்பட்டும் எவையும் இதுவரை வெற்றிபெறவில்லை.
சுமார் ஒரு லட்சம் துருக்கிய – சைப்பிரஸ் குடிமக்கள் இரண்டு பகுதிகளுக்கும் பயணக்கூடிய கடவுச்சீட்டுக்களையோ, அனுமதி அட்டைகளையோ பெற்றிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்