கம்போடியாவின் வேண்டுதலுக்கிணங்க சிங்கப்பூர் சரக்குக் கப்பலொன்றை இந்தோனேசியா கைப்பற்றியிருக்கிறது.
ஜூலை மாதக் கடைசியில் சிங்கப்பூர் நிறுவனமொன்றுக்குச் சொந்தமான கப்பல் சுமாத்திராவுக்கு வெளியே அனுமதியின்றி நங்கூரமிட்டிருந்தது. தாம் அங்கிருப்பதைக் காட்டும் டிஜிட்டல் பொறியை நிறுத்திவிட்டிருந்த அக்கப்பலை இந்தோனேசியக் கடல்படையினர் கைப்பற்றித் தமது பத்தம் கடற்படைத் தளத்துக்குக் கொண்டுவந்திருப்பதாக இந்தோனேசியா தெரிவித்திருக்கிறது.
பஹாமாஸ் கொடியைக் கொண்ட MT Strovolos சரக்குக்கப்பல் 300,000 பீப்பாய் மசகு எண்ணெயைக் கம்போடியாவிலிருந்து திருடிவிட்டதாக அந்த நாட்டின் அதிகாரிகள் குறிப்பிட்டிருக்கிறார்கள். அதனால், பக்கத்து நாடுகளிடம் அக்கப்பலைக் கைப்பற்றித் தம்மிடம் ஒப்படைக்கும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்.
பங்களாதேசத்தைச் சேர்ந்த தலைமை மாலுமி உட்பட 4 பங்களாதேசிகளும், 13 இந்தியர்களும், 3 மியான்மார் குடிகளும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்கள்.
கம்போடியாவின் மசகெண்ணைக் களவு குற்றச்சாட்டு தவிர இந்தோனேசியக் கடலில் தமது அடையாளக் கருவியை அணைத்துவிட்டு அனுமதியின்றிப் பயணித்த குற்றமும் அக்கப்பலின் தலைமை மாலுமி மீது சாட்டப்பட்டிருக்கிறது. அதே கப்பல் தாய்லாந்து நீர்ப்பரப்பிலும் அதேபோலவே அடையாளம் காட்டாமல் பயணித்ததால் தாய்லாந்தும் அக்கப்பலைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கேட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்