ஊடக உரிமைகள் பற்றிய இந்தியாவின் புதிய கட்டுப்பாடுகளுக்கிணங்கி யாஹூ இனிமேல் இந்தியாவில் செய்திகளை வெளியிடாது.
“எங்களுடைய இணையத்தள அங்கத்தவர்களுக்கு நீண்ட காலமாக நாம் டிஜிடல் இணையத்தளம் மூலம் செய்திகளை வழங்கிவந்ததை நிறுத்தவேண்டியிருக்கிறது. வெளிநாட்டு உரிமையாளர்களின் ஊடகங்கள் இந்தியாவில் செய்திகளை வெளியிடுவது பற்றிய இந்திய அரசின் புதிய கட்டுப்பாடுகளை அனுசரித்து இதைச் செய்திருக்கிறோம்,” என்று யாஹூ நிறுவனம் தனது அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.
யாஹூ கிரிக்கெட், வர்த்தகம், செய்திகள், பொழுதுபோக்கு ஆகியவைகளில் இந்தியாவுக்கான செய்திகள் வரும் தளங்களை அந்த நிறுவனம் மூடிவிட்டிருக்கிறது. யாஹூவின் மின்னஞ்சல், தேடுதல் ஆகிய இயக்கங்கள் தொடர்ந்தும் முன்பு போலவே இந்தியாவில் இயங்கும்.
ஒக்டோபர் மாதத்திலிருந்து ஏற்கனவே அறிவிக்கப்பட்ட வெளிநாட்டு முதலீடுகளிலான நிறுவனங்கள் இந்தியாவில் ஊடகங்களாக இருப்பது பற்றிய சட்டங்கள் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வரவிருக்கின்றன. 26 % க்கு அதிகமாக வெளிநாட்டு முதலீடுகளைக் கொண்ட நிறுவனங்கள் இந்தியாவில் ஊடகங்களாகச் செயற்படுவதை நிறுத்த இந்திய அரசு முடிவெடுத்ததே இதன் காரணமாகும்.
“வெளிநாட்டு முதலீடுகள் 26% என்று வரையறுக்கக் காரணங்களிருக்கின்றன. சமூக வலைத்தளங்கள் உட்பட, ஊடகங்கள் எப்படியான விடயங்களை இந்தியாவில், எந்த நோக்குடன் பரப்புகிறார்கள் என்பதை நாம் கவனிப்பதே அதன் நோக்கமாகும். ஊடகத் தளங்கள் முழுசாக வெளிநாட்டவர்கள் கையிலிருப்பது நல்லதல்ல,” என்று இந்திய அரசின் குறிப்பிட்ட கட்டுப்பாடுகளுக்கு விளக்கம் கொடுத்திருந்தார் முன்னால் ஊடக, ஒலி, ஒளிபரப்புத் திணைக்களத்தின் முதல் காரியதரிசி.
சாள்ஸ் ஜெ. போமன்