அமெரிக்காவில் வாழும் இந்தியர்களில் பெரும்பாலானோர் மற்றைய சமூகத்தவரை விட அதிக வருமானமுள்ளவர்களாகியிருக்கிறார்கள்.
அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் மற்றைய நாட்டவரை விட அதிக பணபலமுள்ள ஒரு குழுவினர்களாக மாறிவருவதை அமெரிக்காவின் சமீபத்தைய புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்கள் உயர்ந்த வருமானம் தரும் துறைகளான கணனி விஞ்ஞானம், மருத்துவம், வர்த்தக நிர்வாகம் ஆகியவற்றில் ஈடுபட்டிருக்கிறார்கள். அமெரிக்காவின் 9 % மருத்துவர்கள் இந்தியர்கள். அவர்களில் பாதிப்பேர் அமெரிக்காவில் குடியேறியவர்களாகும்.
தேசிய அளவில் அமெரிக்கக் குடும்ப வருமானமானமாக வருடத்துக்கு சராசரி 40,000 டொலர்களைவிடக் குறைவாகப் பெறுபவர்கள் 33 விகிதத்தினராக இருக்க இந்தியர்களிடையே அத்தகைய குறைவான வருமானம் பெறுபவர்கள் 14 விகிதத்தினர் மட்டுமே.
அதேசமயம் வருடாந்திர வருமானமாக 123,700 டொலர்களையும் அதைவிட அதிகமானதையும் சம்பாதிக்கும் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களின் விகிதம் அதேயளவு வருமானமுள்ள அமெரிக்கர்களின் விகிதத்தை விட அதிகமாகியிருக்கிறது.
சுமார் 4 மில்லியன் இந்தியர்கள் அமெரிக்காவில் வாழ்கிறார்கள். அவர்களில் 1.6 மில்லியன் பேர் விசாக்களுடனும் வாழ்கிறார்கள். 1.4 மில்லியன் பேர் அமெரிக்கக் குடிகளாக மாறியவர்கள். மேலுமொரு மில்லியன் பேர் இந்திய வம்சாவழியினராகும்.
அவர்களுடைய சராசரி வருட வருமானம் 123,700 டொலர்களாகும். அது அமெரிக்கர்களின் தேசிய வருமானத்தை விட இரண்டு மடங்காகும். அமெரிக்கச் சாதாரண வருமானம் வருடத்துக்கு 63,922 டொலர்களாகும். அமெரிக்காவில் வாழும் மற்றைய ஆசியர்களான தாய்வானியர்கள் இரண்டாவது இடத்தில் வருடாந்தர சராசரி வருமான 97,129 டொலருடன் இரண்டாவது இடத்திலும், பிலிப்பினோக்கள் 95,000 டொலருடன் மூன்றாவது இடத்திலுமிருக்கிறார்கள்.
பட்டங்கள் பெற்ற கல்வியறிவிலும் அமெரிக்காவின் முதலிடத்திலிருப்பவர்கள் இந்தியர்களே. 79 % இந்தியர்கள் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாக இருக்கிறார்கள். சராசரியாக 34 % அமெரிக்கர்களே பல்கலைக்கழகப் பட்டதாரிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்