இரசாயண உரங்களில்லாத உணவு என்ற சிறீலங்கா குறிக்கோளின் விலை மக்களுக்குப் பெரும் தாக்கத்தைக் கொடுக்குமா?
2019 ம் ஆண்டில் தேர்தல் வாக்குறுதியாக இரசாயண உரங்களுக்கு அரச மான்யம் தருவோம் என்று கூறிப் பதவிக்கு வந்தார் கோத்தபயா ராஜபக்சே. ஆனால், இவ்வருட ஆரம்பத்தில் இரசாயண உரங்கள் மனிதர்களின் உணவில் சேர்ந்து ஆரோக்கியக் கேடுகள் பலவற்றுக்குக் காரணமாகிறது என்று குறிப்பிட்ட அவர் அவைகளின் இறக்குமதியை முழுவதுமாக நிறுத்திவிட்டார்.
ராஜபக்சேயின் குறிக்கோள் சிறீலங்கா இயற்கை உரங்களை மட்டுமே பாவிக்கும் உலகின் முதலாவது நாடாகவேண்டும் என்பதாகும். விவசாயம் மற்றும் நாட்டின் முக்கிய ஏற்றுமதிப் பொருட்களான தேயிலை, கறுவா, மிளகு ஆகியவற்றில் ஈடுபட்டிருப்பவர்கள் தமது வருமானத்துக்கு இதனால் பெரும் தாக்குதல் ஏற்படும் என்று அஞ்சுகிறார்கள். அது மட்டுமன்றி திடீரென்று எடுக்கப்பட்டிருக்கும் அந்த முடிவால் நாட்டின் உணவு உற்பத்தியும் பெருமளவில் குறைந்து சமூகத்திலும் பல பிரச்சினைகளை உண்டாக்கலாம் என்று அவர்கள் அச்சமடைகிறார்கள்.
தேயிலை சிறீலங்காவின் ஏற்றுமதியில் 10 விகிதமானது. கறுவாவைப் பொறுத்தவரை உலகின் 85 % சிறீலங்காவில் தயாரிக்கப்படுகிறது. கையிருப்பிலிருந்த இறக்குமதி உரங்களின் பாவிப்பினால் நல்ல விளைச்சலைப் பெற்றிருக்கும் தேயிலைத் தோட்டங்களில் அடுத்து வரும் காலத்தில் மிகப்பெரும் தயாரிப்பு வீழ்ச்சி ஏற்படுமென்று எச்சரிக்கப்படுகிறது. அதன் விளைவாக ஏற்றுமதி குறைவது, ஏற்றுமதி வருமானம் குறைவதுடன் அத்தயாரிப்பைச் சுற்றிய துறைகளில் வேலைசெய்யும் சுமார் 3 மில்லியன் பேரின் தொழில் வாய்ப்புக்களுக்கும் ஆபத்து என்று தேயிலைத் தயாரிப்பாளர்கள் சிலர் குறிப்பிடுகிறார்கள்.
நாட்டின் தோட்டத்தொழில் அமைச்சர் ரமேஷ் பதிரண தம்மால் தேவையான அளவு இயற்கை உரங்களைத் தயாரிக்க முடியுமென்று நம்பிக்கை தெரிவிக்கிறார். “ஆரோக்கியமான நஞ்சு கலக்காத உணவுப் பொருட்களைத் தயாரித்துப் பாவனைக்குக் கொண்டுவருவது” தனது முக்கிய நோக்கம் என்று ஜனாதிபதி ராஜபக்சே தெரிவிக்கிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்