கொவிட் 19 இன் தாக்குதல் சுபீட்சமான நாடுகளிலும் பிள்ளைப் பிறப்பைக் குறைவாக்கியிருக்கிறது.
கொரோனாத்தொற்றுக்களும், இறப்புக்களும் ஏற்படுத்திய பக்க விளைவுகளில் ஒன்று குழந்தைகள் பிறப்பைக் குறைப்பதாகும் என்கிறது 22 சுபீட்சமான நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியொன்று. உலகின் பெரும்பாலான நாடுகளில் ஏற்பட்டுவரும் குழந்தைப்பிறப்பு எண்ணிக்கை வீழ்ச்சியைக் கொவிட் 19 தாக்குதல் மேலும் தீவிரப்படுத்தும் என்று பல ஆராய்ச்சியாளர்களும் எதிர்பார்த்தது போலவே நடந்திருப்பதை அந்த ஆராய்ச்சி உறுதிப்படுத்தியிருக்கிறது.
ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, டென்மார்க், சுவிடன், அமெரிக்கா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி,நோர்வே, இஸ்ராயேல், ஸ்பெயின், ஹங்கேரி, ஐஸ்லாந்து ஆகிய நாடுகளின் பிள்ளைப் பிறப்புக்களையும் அந்த ஆராய்ச்சி ஒப்பிடுதலில் சேர்த்திருந்தது.
“ஜேர்மனி, சுவீடன்,நோர்வே, நெதர்லாந்து ஆகிய நாடுகளிலிருக்கும் மக்களின் நலங்களை பேணும் திட்டங்களால் அந்த நாடுகளில் பிள்ளைப் பெறுதல் கொவிட் 19 காலத்தில் குறையவில்லை. அந்த நாடுகளில் மக்கள் ஆரோக்கியம், வேலையிழப்பு, வருமான வீழ்ச்சி போன்றவைகள் பற்றி கிலேசமடைய வேண்டியதில்லை,” என்கிறார் ஆராய்ச்சியின் தலைவராக இருந்த லெதீஸியா மென்கரீனி.
“அமெரிக்கா, போர்த்துக்கால், இத்தாலி போன்ற நாடுகள் பணக்கார நாடுகளாக இருப்பினும் அங்கே மக்களின் வாழ்வாதாரத்துக்கு அரசுகள் உதவுவது குறைவு. தொற்று நோய்த் தாக்குதல் அவர்களுடைய எதிர்காலத்தை நிலையற்றதாக்குவதால் அந்த நாடுகளில் பிள்ளைப்பேறுகள் கொரோனாத்தொற்றுக் காலத்தில் குறைந்திருக்கின்றன,” என்று தொடர்கிறார் மென்கரீனி.
பல வருடங்களாகவே இத்தாலியில் ஏற்பட்டிருந்த குழந்தைப்பேறு வீழ்ச்சி 2020 இல் 16,000 ஆல் குறைந்திருக்கிறது. விகிதாசாரத்தில் பார்த்தால் 9.1 % ஆல் குறைவாகியிருக்கிறது. ஹங்கேரியில் 8.5 %, ஸ்பெய்ன் 8.5 %, போர்த்துக்கல் 6.6 % ஆகிய நாடுகளிலும் பிள்ளைப்பெறுதல் குறைந்திருக்கிறது. குறிப்பிட்ட நாடுகளில் ஏற்கனவே பல வருடங்களாகக் குறைந்துகொண்டிருந்த பிள்ளைப் பெறுதல் வீழ்ச்சியுடன் 2020 ஒப்பிடப்பட்டிருக்கிறது.
ஆராய்வுக்காக எடுக்கப்பட்ட நாடுகளில் 2019 ம் ஆண்டு மாதங்களுடன் 2020 ஒப்பிடப்பட்டபோது சராசரியாக 3 % ஆல் குழந்தை பெறுதல் குறைந்திருக்கிறது. டிசம்பர் மாதங்களை ஒப்பிட்டபோது வித்தியாசம் – 21 % ஆகும்.
இதனால் முக்கியமாகப் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் இளவயதினர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்கள் தமது தொழில்வாய்ப்புக்களைச் சமீபத்தில் தான் பெற்றிருப்பதால் எதிர்காலம் பற்றிய நம்பிக்கை அவர்களுக்கு ஆட்டம் கண்டிருக்கிறது. அதனால் திருமணம், பிள்ளைப் பெறுதல் ஆகியவற்றைத் தள்ளிப்போட்டிருக்கிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்