ஜப்பானியப் பிரதமர் யோஷிஹீடெ சுகா தான் மீண்டும் அப்பதவிக்குப் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார்.
ஒரு வருடம் மட்டுமே ஜப்பானியப் பிரதமராகப் பணியாற்றிய யோஷிஹிடெ சுகா, விரைவில் முடியப்போகும் தனது பதவிக்காலத்தின் பின்னர் தான் கட்சித் தலைமைக்கு மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்தார். நாட்டில் பரவிவரும் கொரோனாத் தொற்றுக்களுக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதில் அவர் பெற்ற விமர்சனங்களே அதற்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
கடந்த வருடம் வரை பிரதமராக இருந்த ஷின்சோ ஆபெ தனது உடல்நிலை சரியில்லாததால் கட்சித் தலைவர் பதவி, பிரதமர் பதவியிரண்டையும் விட்டு விலகினார். ஷின்சோ ஆபெ ஜப்பானில் நீண்டகாலமாகத் தொடர்ந்து பிரதமராக இருந்தவராகும்.
அச்சமயத்தில் ஆளும் லிபரல் டெமொகிரடிக் கட்சித் தலைமைப் பதவியை ஏற்றவர் யோஷிஹிடெ சுகா. செப்டெம்பரில் நடக்கவிருக்கும் தேர்தலில் அவர் மீண்டும் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இம்மாதம் நடக்கவிருக்கும் கட்சித் தலைவர் பதவியிலிருந்து அவர் விலகுவதாக அறிவித்திருப்பது கட்சியினருக்குப் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது.
நாட்டின் பெரும் பாகம் தொடர்ந்தும் கொரோனாக் கட்டுப்பாடுகளுக்குள் இருந்து வருகிறது. ஒரு வருடமாகப் பல நடவடிக்கைகளை எடுத்தும் ஜப்பான் அரசால் அங்கு வேகமாகப் பரவிவரும் டெல்டா திரிபைக் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. அதைத் தவிர ஜப்பானியர்களின் எதிர்ப்பையும் பொருட்படுத்தாமல் டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டிகளை நடாத்தியதும் சுகாவின் தலைமை மக்களிடையே ஆதரவை இழந்துவரக் காரணமாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்