ஐரோப்பிய ஒன்றியத்தின் பரிந்துரைப்படி அமெரிக்கா, இஸ்ராயேல் ஆகிய நாட்டவர் சுவீடன், போர்த்துக்கலுக்குள் நுழையத் தடை.
கடந்த வார இறுதியில் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கா, இஸ்ராயேல், கொஸோவோ, மொண்டிநீக்ரோ, வட மசடோனியா, லெபனான் நாட்டில் கொவிட் பரவல் பெருமளவில் அதிகரித்திருப்பதால் அந்த நாட்டவரை ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் நுழைய அனுமதிக்கலாகாது என்று பரிந்துரைத்திருந்தது. அதையேற்று நடைப்படுத்தும் முதலிரு நாடுகள் சுவீடனும், போர்த்துக்கலுமாகும். மற்றைய ஐரோப்பிய நாடுகளும் அதே முடிவை எடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உலக நாடுகளிலேயே வேகமாகத் தனது மக்களில் பெரும்பான்மையோருக்கு கொவிட் 19 தடுப்பூசிகளைப் போட்ட நாடாக இருப்பினும் இஸ்ராயேலில் கடந்த வாரத்தில் பெருமளவு பேருக்குக் கொரோனாத் தொற்று ஏற்பட்டிருந்தது. அமெரிக்கர்கள் ஐரோப்பியர்களைத் தமது நாட்டுக்குள் அனுமதிக்காமலிருப்பினும் ஐரோப்பிய ஒன்றியம் அமெரிக்கர்களை உள்ளே வர அனுமதித்திருந்தது. ஆனால், அங்கேயும் கொவிட் பரவல் மீண்டும் அதிகரித்திருப்பதால் அவர்களும் தடுப்பு மருந்துகளைப் போட்டிருந்தாலும் சுவீடன், போர்த்துக்கலுக்குள் தற்போது நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள்.
ஐரோப்பிய ஒன்றியத்துக்குள் வழங்கப்பட்ட கொவிட் 19 சான்றிதழ்களை மட்டுமே ஏற்றுக்கொள்ளுமாறு ஒன்றியத் தலைமை பரிந்துரை செய்திருக்கிறது.
இஸ்ராயேலியர்கள் தடுப்பு மருந்துகளைப் பெற்றிருந்தால் நெதர்லாந்துக்குள் அனுமதிக்கப்படுவர். ஆனால், அவர்கள் தமக்குத் தொற்றில்லை என்று நிரூபிக்கும் சான்றிதழைக் காட்டவேண்டும், முதல் வாரத்துக்குத் தம்மைத் தனிமைப்படுத்திக்கொள்ளவும் வேண்டும்.
சாள்ஸ் ஜெ. போமன்