இளவயதினருக்கான இணையத்தள விளையாட்டு நேரம் வாரத்துக்கு மூன்று மணிகளே என்கிறது சீனா.
செப்டெம்பர் 1 ம் திகதி முதல் சீனாவின் 18 வயதுக்கு உட்பட்டவர்கள் வாரத்தில் மூன்று மணி நேரங்கள் மட்டுமே நேரடி இணையத்தள விளையாட்டில் ஈடுபடலாம் என்று கட்டுப்பாடு கொண்டுவரப்பட்டிருக்கிறது. அந்த மூன்று மணி நேரம் வெள்ளி, சனி, ஞாயிறு தினங்களில் தலா ஒரு மணி நேரம் என்பதும் அந்த நேரம் 20.00 – 21.00 வரை என்பது அந்த வரையறையில் அடங்கும். தேசிய விடுமுறை நாட்களிலும் விளையாட்டு அனுமதிக்கப்படும்.
சமீபத்தில் சீனா தனது நாட்டின் பிள்ளைகளின் நலத்தை மேம்படுத்தக் கொண்டுவரப்பட்ட நடவடிக்கைகளில் ஒரு பகுதி அவர்கள் கல்வி சம்பந்தப்பட்டவை. இன்னொரு பக்கம் அவர்களின் மன உழற்சிக்கும், ஒழுங்கின்மைக்கும் காரணம் இணையத்தள விளையாட்டுக்களே என்று சீன அரசு கணிக்கிறது. அதனால், “இணையத்தள விளையாட்டுக்கள் ஆன்மாவுக்கான எலக்ரோனிக் அபின்” என்று சாடியிருப்பதுடன் அதைக் கட்டுப்படுத்தும் நோக்கில் நடவடிக்கைகளையும் எடுத்திருக்கிறது.
சீன அரசின் புதிய கட்டுப்பாடுகளை நடைமுறைக்குக் கொண்டுவரும் பொறுப்பு இணையத்தளங்களில் விளையாட்டுக்களை நடாத்திவரும் நிறுவனங்களிடம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அவ்விளையாட்டுக்களில் ஈடுபடுபவர்களின் வயது, அடையாளம் ஆகியவற்றைக் கண்காணிக்கக்கூடிய தொழில்நுட்பங்களை நடைமுறைக்குக் கொண்டுவருவது அவர்களுடைய பொறுப்பாகும்.
சமீப வருடங்களில் சீனாவின் அரசு தனது நாட்டின் மிகப்பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. சர்வதேச அளவில் மிகப்பெரும் இலாபங்களைச் சம்பாதிக்கும் அவைகள் வளரும் சிறு நிறுவனங்களை வீழ்த்திவருவது பற்றி சீன அரசு சாடி வருகிறது. அப்படியான காரணங்களுக்காக சீன நிறுவனங்கள் உட்படச் சில பெரும் தண்டங்களைச் செலுத்த அரசு உத்தரவிட்டிருக்கிறது. முக்கியமாக உலகின் மிகப்பெரும் இணையத் தள நிறுவனமான அலிபாபாவைச் சீனா பலமாகத் தண்டித்திருக்கிறது.
புதியதாகக் கொண்டுவரப்பட்டிருக்கும் கட்டுப்பாட்டின் இன்னொரு நோக்கம் அலிபாபாவுக்கு அடுத்த இடத்திலிருக்கும் சீன நிறுவனமான Techcent மீது அரசு தனது கண்ணை வைத்திருப்பதே என்றும் சிலரால் குறிப்பிடப்படுகிறது. சீனாவின் மிகப் பிரபலமான இணையத்தள விளையாட்டான Honor of Kings மட்டுமே நாளுக்கு 100 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் விளையாடும் தளமாக இருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்