நாஸாவினால் செவ்வாய்க் கிரகத்துக்கு அனுப்பப்பட்டிருந்த விண்வெளிக்கப்பல் பாறைத்துண்டொன்றைச் சேகரித்தது.
செவ்வாய்க் கிரகத்துக்கு அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையம் அனுப்பியிருந்த விண்வெளிக் கப்பல் தன்னுடன் கொண்டு சென்றிருந்த ரோவர் வாகனம் மூலமாக அக்கிரகத்தில் வெவ்வேறு பரீட்சைகளில் ஈடுபட்டிருப்பது தெரிந்ததே. அவைகளில் சில வெற்றிகரமாகவும், சில தோல்வியாகவும் ஆகின. பொறுமையைச் சோதிக்கும் பல பரீட்சைகள் நேரவிரயங்களையும் உண்டாக்குகின்றன.
செவ்வாய்க் கிரகத்திலிருக்கும் மண் துகள்களைச் சேகரிப்பது, பாறைத் துண்டொன்றைச் சேகரிப்பது, அவைகளைப் பூமிக்கு எடுத்துவந்து அவைகளின் தன்மைகளைப் பரிசீலிப்பது ஆகியவையும் நாஸாவின் திட்ட்டங்களில் முக்கியமானவையாகும். செப்டெம்பர் 1 ம் திகதியன்று ரோவர் பாறைத்துண்டொன்றைச் சேர்த்திருப்பதாக நாஸாவின் ஆராய்ச்சியாளர்கள் அறிவித்திருக்கிறார்கள். இதே போன்ற ஒரு முயற்சி ஆகஸ்ட் மாதத்தில் தோல்வியில் முடிந்ததால் இந்த வெற்றி அவர்களை மிகவும் மகிழ்ச்சியடையவைத்திருப்பதாகக் குறிப்பிடுகிறார்கள்.
அப்பாறைத் துண்டை Perseverance வாகனம் தன்னில் பொருத்தப்பட்டிருக்கும் பாறையில் துளைபோடும் இயந்திரம் மூலம் ஓட்டையிட்டுப் பாதுகாப்பாக எடுத்துக்கொண்டதா என்பது பற்றி ஆரம்பத்தில் அவர்கள் தெளிவாக இருக்கவில்லை. எனவேதான் அவ்விடயம் பற்றி வெளிப்படுத்தச் சில நாட்கள் தாமதமாகியிருக்கின்றன. வெட்டியெடுக்கப்பட்ட சிறு பெட்டியளவான பாறைத் துண்டுக்கு “Rochette” என்று பெயரிடப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்