செவ்வாயில் ஹெலி வெற்றிகரமாக கிளம்பிப் பறந்து வரலாற்று சாதனை.

புத்திக்கூர்மைக் ஹெலிக்கொப்ரர் அதன்முதலாவது பரீட்சார்த்தப் பறப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமாகிய நாசா அறிவித்திருக்கிறது.

https://vetrinadai.com/news/ingenuity-mars/

தரையில் இருந்து கிளம்பிப் பறந்து மீண்டும் குறிப்பிட்ட இடத்தில் தரையிறங்கும் வரை பயணத் திட்டம் எவ்வித குழப்பங்களும் இன்றி முழுமையான இலக்கை எட்டியிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பூமிக்கு வெளியே வேற்றுக் கிரகம் ஒன்றில் மனிதன் சாதித்துள்ள இன்றைய பறப்பு 1903 ஆம் ஆண்டு ரைட் சகோதரர்கள் (Wright brothers) பூமியில் நிகழ்த்திக் காட்டிய முதல் விமானப் பறப்பு முயற்சி போன்றதொரு சரித்திர நிகழ்வாகப் பதிவாகி உள்ளது.

ஹெலி பறக்கும் காட்சியின் கறுப்பு- வெள்ளைப் படம் ஒன்று செய்மதி வழியே தரைக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு முதலில் கிடைத்தது என்றும், மேலும் பல வர்ணப் படங்களும் சிறிய வீடியோக்களும் சில தினங்களில் வெளியாகும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

ஹெலி வெற்றிகரமாகப் பறந்த செய்தியை செவ்வாய்க் ஹெலிக்கொப்ரர் திட்டத்தின் தலைமை முகாமையாளர் மிமி ஆங் (MiMi Aung) தனது குழுவினரின் பலத்த கரகோஷத்தின் மத்தியில் அறிவித்தார்.

“வேற்றுக் கிரகங்களில் இயந்திரத்தால் இயங்கும் விமானங்களில் மனிதன் பறக்க முடியும் என்பதை இனி எங்களால் உறுதியாகக் கூறமுடியும்”- என்று அவர் குறிப்பிட்டார்.

Ingenuity எனப் பெயரிடப்பட்ட ரோபோ ஹெலி தரையில் இருந்து சுமார் மூன்று மீற்றர்கள் உயரம் எழுந்து, மிதந்து பின்னர் சுழன்று தரையிறங்குவதை காட்சிகள் காட்டுகின்றன என்று நாசா
அதன் ருவீற்றர் தளத்தில் தெரிவித்துள்ளது.

பூமியின் வளிமண்டலத்தை விட பல மடங்கு அடர்த்தி குறைந்த மென்மை யான செவ்வாயின் வாயு மண்டலத்தில் பறக்க வசதியாக ஹெலியின் விசிறிகள் வடிவமைப்பட்டிருந்தன.நிமிடத்துக்கு 2ஆயிரத்து 500 தடவைகள் சுழற்சி வேகம் கொண்டதாக அவை உள்ளன.

ஹெலி அதன் முதற் பறப்பைத் தொடர்ந்து எதிர்வரும் நாட்களில் மேலும் நான்கு பறப்புகளில் ஈடுபடுத்தப்படும். அதன் பின்னர் ஒரு மாத காலத்தில் அதன் சோதனைகள் அனைத்தும் நிறுத்தப்படும். அதன் பிறகு தாய்க் கலமான Perseverance செவ்வாயில் உயிரின் சுவடுகளை தேடும் பணியில் முழுமையாக ஈடுபடும்.

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *