விண்கலம் இறங்கிய இடத்துக்குபுனைகதை எழுத்தாளரது பெயர்

வேற்றுக் கிரகங்களில் மனிதர்களது இன்றைய சாதனைகள் அனைத்துமே என்றோ கற்பனைக் கதைகளில் உதித்தவைதான்.”ஸ்ரார் வோர்”(Star War) முதல், ‘Perseverance’ வரை அனைத்து அதிசயங்களும் ஏற்கனவே புனைகதைகளாகக் கூறப்பட்டு அந்த நம்பிக்கையில் அதன்வழி அறிவியலாளர்களால் எட்டப்பட்ட வெற்றிகளே ஆகும்.

நாசா விஞ்ஞானிகளால் கவரப்பட்ட கறுப்பினப் பெண் அறிவியல் புனைகதையாளர் ஒக்ராவியா பட்லர் (Octavia E. Butler) தனிப்பட்ட முறையிலும் தனது படைப்புகள் ஊடாகவும் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலைய அறிவியல் சமூகத்தோடு தன்னை இணைத்து வாழ்ந்தவர்.

1993 இல் அவர் தனது நாவல் ஒன்றில் செவ்வாய்க் கிரகத்தை “ஒரு பாறை- குளிர் – கிட்டத்தட்ட காற்று இல்லாத – உயிரற்ற – ஓர் அதிசயம்” என்று வர்ணித்திருந்தார். ‘Perseverance’ விண்கலத்தை வடிவமைத்த விஞ்ஞானிகளில் பலர் தங்களது இளவயதில் அவரது அந்தப் புனைகதையால் தாங்கள் தூண்டப்பட்டதை இப்போது நினைவு கூருகின்றனர்.

செவ்வாயில் ஜெஸீரோ கிரேட்டர் பகுதியில் நாசாவின் Perseverance விண்கலம் தரையிறங்கிய இடத்துக்கு ஒக்ராவியா பட்லரின் பெயர் சூட்டப் படுவதாக நாசா அறிவித்திருக்கிறது.

“எதிர்காலத்தைப்பற்றிக் கனவு காண எங்களுக்கு உதவிய எழுத்தாளர் அவர். என்றைக்கோ ஒருநாள் செவ்வாயில் தரை இறங்க முடியும் என்ற எங்கள் கனவுக்கு நம்பிக்கையூட்டிய அந்தப் பெண்ணுக்கு செலுத்தும் அஞ்சலி இது” என்று நாசா ஓர் அறிக்கையில் தெரிவித்திருக்கிறது.

ஆபிரிக்க – அமெரிக்க விஞ்ஞானப் புனைகதை எழுத்தாளரான ஒக்ராவியா, அறிவியல் புனைகதைகளுக்கான அதி உயர் விருதாகிய ‘ஹியூகோ-நபுல்லா'(Hugo and Nebula awards) விருதை வென்ற ஒரேயொரு அமெரிக்கக் கறுப்பினப் பெண் ஆவார்.அவர் 2006 இல் தனது 58 ஆவது வயதில் காலமானார்.

நாசா இதற்கு முன்னரும் செவ்வாயில் சில இடங்களுக்குப் புனைகதை எழுத்தாளர்களின் பெயர்களைச் சூட்டி உள்ளது. 2012 இல் அமெரிக்க விண்கலமான Curiosity rover தரையிறங்கிய இடத்துக்கு மற்றொரு பிரபல அறிவியல் புனைகதை எழுத்தாளர் ரே பிரெட்புறி யின் (Ray Bradbury) பெயர் அவரது மறைவை அடுத்து சூட்டப்பட்டது.

நாசா சூட்டுகின்ற இந்தப் பெயர்கள் சூரிய மண்டலத்தின் பெயர்களை அதிகாரபூர்வமாக நியமிக்கும் சர்வதேச வானியல் ஒன்றியத்தினால்(International Astronomical Union) இன்னமும் முறைப்படி அங்கீகரிக்கப்படாவிட்டாலும் செவ்வாய்க் கிரகம் தொடர்பான அறிவியல் ஆவணங் களில் செவ்வாயின் தரைப் பகுதிகள் இதே பெயர்கள் கொண்டே அழைக்கப் பட்டுவருகின்றன. –

குமாரதாஸன். பாரிஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *