கழுதைப்பாலிலிருந்து செய்யப்பட்ட சவர்க்கார வியாபாரம் ஜோர்டானில் சூடு பிடிக்கிறது.
மத்தியதரைக்கடல் நாடுகளில் ஆங்காங்கே கழுதைப்பாலில் இருந்து செய்யப்பட்ட சவர்க்காரம் விற்கப்படுகிறது. ஜோர்டானில் அதை ஒரு குடும்பத்தினர் சிறிய அளவில் ஒரு வருடத்துக்கு முன்னர் ஆரம்பித்தார்கள். ஆரம்பத்தில் கேலிக்குள்ளான அந்தத் தயாரிப்புக்கான தேவை சந்தையில் பெருமளவில் சூடு பிடித்திருக்கிறது.
தோலைக் காயாமல், வெடிக்காமல் பாதுகாக்கவும், இளமையாக வைத்திருக்கவும் கழுதைப் பால் உதவுவதாகக் குறிப்பிடப்படுகிறது. அது கனிப்பொருட்கள் நிறைந்ததாக இருப்பதால் அது தோலில் வியாதிகள் வராமல், அரிப்புண்டாக்கும் கிருமிகள் பாதிக்காமல் பாதுகாக்கிறது என்று ஆராய்ச்சிகள் மூலம் தெரியவருகிறது.
கழுதைகளில் நாளுக்கு மூன்று தடவை பால் கறக்கப்படுகிறது. பாதாம் கொட்டை எண்ணெய், தேங்காயெண்ணெய், வேப்பெண்ணெய் ஒலிவெண்ணெய் போன்றவைகளும் கழுதைப்பால் சவர்க்காரம் செய்யப் பாவிக்கப்படுகின்றன.
வறிய நாடான ஜோர்டானில் கொரோனாக்காலக் கட்டுப்பாடுகள் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்திருக்கிறது. மோசமாகிக் கொண்டிருக்கும் நாட்டின் பொருளாதார நிலைமை நாட்டின் 24 விகிதத்தினரை வறுமைக்கோட்டுக்குக் கீழே தள்ளும் என்று கணிக்கப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்