ஐந்து தடவைகள் எம்மி விருதுக்காகத் தெரிந்தெடுக்கப்பட்ட மைக்கல் K. வில்லியம்ஸ் 54 வயதில் இறந்தார்.
தான் நடித்த ஒமார் லிட்டில் என்ற “The Wire” தொடரின் பாத்திரத்தின் மூலம் ரசிகர்களுக்குப் பெருமளவில் அறிமுகமான நடிகர் மைக்கல் K. வில்லியம்ஸ் தனது வீட்டில் இறந்துவிட்டிருந்தது நியூ யோர்க் பொலிஸாரால் அறிவிக்கப்பட்டது. முதல் தடவையாக “Bessie” என்ற பெஸ்ஸி ஸ்மித் என்ற அமெரிக்க இசைக்கலைஞரின் வாழ்க்கை பற்றிய சினிமாவில் நடித்ததற்காக எம்மி விருதை 2015 இல் பெற்றவர் மைக்கல் K. வில்லியம்ஸ்.
தனது நடிப்புத் திறமையால் மொத்தமாக நான்கு தடவைகள் அவ்விருதையும் பெருமளவு பாராட்டுக்களையும் பெற்றிருக்கிறார் மைக்கல் K. வில்லியம்ஸ். HBO நிறுவனத்தின் பல தொடர்களிலும், தொலைக்காட்சி சினிமாக்களிலும் அவர் நடித்திருக்கிறார்.
“ஒரு கலைஞராக அவரது மகத்தான திறமைகளை உலகம் அறிந்திருந்தாலும், மைக்கேலை அவருடன் பணிபுரியும் பாக்கியம் பெற்ற அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு அன்பான நண்பராக நாங்கள் அறிந்திருக்கிறோம். அளவிட முடியாத இந்த இழப்புக்கு அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்று 20 வருடங்களாக அவரை நடிக்க வைத்த அந்த நிறுவனம் தனது மறைவு அஞ்சலியைத் தெரிவித்திருக்கிறது.
1996 இல் முதல் தடவையாக “Bullet” சினிமாவில் தோன்றினார் மைக்கல் K. வில்லியம்ஸ். அதற்கு முதல் இசைக்கலைஞர்களான மடொன்னா, ஜோர்ஜ் மைக்கல் ஆகியோரின் இசைப்படங்களில் நடித்திருக்கிறார்.
இளவயதிலேயே போதை மருந்துப் பழக்கத்துக்கு அடிமையான மைக்கல் K. வில்லியம்ஸ் தனது நடிப்புக் காலத்திலும் அதைப் பாவித்து வந்ததைப் பற்றிப் பல தடவைகள் பகிரங்கமாக ஒத்துக் கொண்டிருக்கிறார். போதைப் பொருட்களிலிருந்து விடுதலை பெறுவது மிகக் கடினமானது என்றும் தான் அவைகளிலிருந்து விடுபடப் போராடி வருவதாகவும் குறிப்பிட்டு வந்தார்.
இறந்து போன மைக்கல் K. வில்லியம்ஸின் உடலுக்குப் பக்கத்தில் போதைப் பொருளைப் பாவிக்கும் உபகரணம் இருந்ததாகப் பொலீஸார் தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், அவர் எதனால் இறந்தார் என்ற விபரங்கள் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
சாள்ஸ் ஜெ.போமன்