வேகமாக உருகிவரும் இயற்கைப் பனிமலையைக் காப்பாற்ற செயற்கைப் பனியால் அதை நிரப்பும் நோர்வே.
நோர்வேயின் மூன்றாவது இயற்கைப் பனிமலை folgefonna glacier ஆகும். வெப்பமாகும் காலநிலையால் வேகமாகக் கரைந்துவருகிறது அந்தப் பனிமலை. நோர்வேயின் மேற்கில் ஹர்டாங்கர் தேசிய வனத்தினுள் இருக்கிறது சுமார் 200 சதுர கி.மீ பரப்பளவிலான அந்தப் பனிமலை.
2018 இல் நோர்வேயின் இயற்கைப் பனிமலைகளுக்கு மிகவும் மோசமான வருடம் என்று குறிப்பிடப்பட்டது. அந்த நாட்டிலிருக்கும் எந்த இயற்கைப் பனிமலைக்கும் அவ்வருடம் புதிய பனி கிடைக்கவில்லை, பதிலாக வெம்மையால் அவை வழக்கத்தைவிட அதிகமாக உருகின. 1960 ம் ஆண்டிலிருந்தே நோர்வேயின் பனிமலைகள் வருடாவருடம் அளக்கப்பட்டு வருகின்றன. குறிப்பிட்ட பனிமலை இதே வேகத்தில் கரையுமானால் இன்னும் ஐந்தே வருடத்தில் அந்தப் பனிமலையின் வெள்ளை உச்சிகளைக் காணமுடியாது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
அந்தப் பனிமலையில் ஒரு பகுதி பனிச்சறுக்கு விளையாட்டுகளுக்கும் பாவிக்கப்பட்டு வந்தது. அங்கே கோடைகாலத்திலும் திறந்திருக்கும் பனிச்சறுக்கு வாசஸ்தலம் இருந்ததால் அது அவ்விளையாட்டுப் பிரியர்களிடையே பிரபலமானது. இவ்வருடம் சில மாதங்களுக்கு முன்னரே அது சுற்றுலாப் பயணிகள், விளையாட்டுப் பிரியர்களுக்கு மூடப்பட்டுவிட்டது.
அந்தப் பனிமலையில் ஏற்பட்டிருக்கும் வெடிப்புக்களை மூடி அதை அழியாமல் பாதுகாக்க அதன் மீது செய்ற்கைப் பனியை இயந்திரங்களால் நிரப்பி வருகிறார்கள். அந்த இயற்கைப் பனிமலையைப் பாதுகாத்தே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது. எத்தனை செலவானாலும் அந்தப் பனிமலையைக் காப்பாற்றியே ஆகவேண்டும் என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
folgefonna glacier மீது எடுக்கப்பட்டிருக்கும் இந்த நடவடிக்கை வெற்றியடையுமானால் உலகின் பல நாடுகளிலும் சமீப வருடங்களில் கரைந்துவரும் இயற்கைப் பனிமலைகளைக் காப்பாற்றும் ஒரு வழி கிடைக்குமென்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள்.
சாள்ஸ் ஜெ. போமன்