ஸ்புட்நிக் மருந்தை அங்கீகரிப்பதற்கான செயற்பாடுகள் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் நிறுத்தப்பட்டன.
ரஷ்யாவின் கொவிட் 19 தடுப்பு மருந்தான ஸ்புட்நிக்கை அந்தத் தொற்று வியாதியைத் தடுப்பதற்கான மருந்தாக ஏற்றுக்கொள்வதற்காக இதுவரை நடந்துவந்த செயற்பாடுகளை நிறுத்தியிருப்பதால உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அறிவித்திருக்கிறது.
ஸ்புட்நிக் தடுப்பு மருந்து தற்போது உலகின் பல நாடுகளிலும் கொவிட் 19 க்காகப் பாவிக்கப்பட்டு வருகின்றன. இதுவரை பிரேசில் மட்டுமே அந்தத் தடுப்பு மருந்துத் தயாரிப்பில் குளறுபடி இருப்பதாகக் குறிப்பிட்டு அதை வாங்க மறுத்ததிருக்கிறது. அவர்கள் அதைச் செய்த அதே ஏப்ரல் மாதத்தில் இந்தியாவில் அந்தத் தடுப்பு மருந்து அவசரகாலப் பாவனைக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
மருத்துவ உலகில் மதிக்கப்படும் சஞ்சிகையான The Lancet அந்தத் தடுப்பு மருந்து கொவிட் 19 எதிராக 91.6 % பலனுள்ளதாக இருப்பதாகத் தெரிவித்திருந்தது. அதை அங்கீகரிக்க முன்னர் அதற்கான பரிசோதனை விபரங்களைக் கையளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றிய மற்றும் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பின் அதிகாரங்கள் கேட்டிருந்தன.
பெப்ரவரி மாதத்தில் ஸ்புட்நிக் தயாரிக்கும் நிறுவனம் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும், உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கும் தமது விபரங்களை அனுப்பி வைத்தது. அதுபற்றிய மேலும் விபரங்கள் கேட்கப்பட்டிருக்கின்றன.
அடுத்த கட்டமாக மருந்துத் தயாரிப்பின் தொழிற்சாலை பரிசோதனைக்கு உட்படுத்தப்படும் நிலையிலேயே உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு அதற்கான அனுமதி கொடுக்கும் நடவடிக்கைகளை நிறுத்திவிட்டிருப்பதாகத் தெரிவித்திருக்கிறது.
மில்லியன் கணக்கான ரஷ்யர்களும், தென்னமெரிக்கர்களும் ஸ்புட்நிக் தடுப்பூசி போட்டுக்கொண்டிருக்கிறார்கள். அது உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பால் ஏற்றுக்கொள்ளப்படும்பட்சத்தில் அந்த மக்கள் உலகில் பிரயாணம் செய்வது இலகுவாகும்.
சாள்ஸ் ஜெ. போமன்