மியான்மாரின் ஜனநாயகப் போராளிகள் இராணுவ வாகன அணியை வீதிக்கண்ணிவெடிகளால் தாக்கினார்கள்.
மியான்மார் அரசைக் கவிழ்த்த இராணுவத்துக்கு எதிராகப் போராட வரும்படி சமீப வாரங்களில் ஜனநாயகப் போராளிகள் அமைப்பு விட்ட அறைகூவலை ஏற்றுப் பல நகரங்களில் மக்கள் ஒன்றிணைந்து எதிர்ப்புக் குழுக்களை ஆரம்பித்திருக்கிறார்கள். அவர்கள் அதையடுத்துப் பல இடங்களிலும் இராணுவத்தினரைத் தாக்கியிருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன. தலைநகரான யங்கூனுக்கருகே இராணுவப் படையினரை விடுதலை இயக்கத்தினர் குண்டு வைத்துவிட்டு ஆயுதப் போரில் ஈடுபட்டதாக இராணுவத் தலைமை தெரிவித்திருக்கிறது.
போராளிகளால் தயாரிக்கப்ப்பட்ட அந்தக் குண்டுத் தாக்குதலையடுத்து நடந்த துப்பாக்கிச்சூடுகளில் இரண்டு போராளிகள் கொல்லப்பட்டதாகவும் ஒருவர் காயப்பட்டுக் கைது செய்யப்பட்டதாகவும் உள்ளூர் பத்திரிகை விபரங்கள் தெரிவிக்கின்றன. பல ஆயுதங்களைத் தாம் கைப்பற்றியிருப்பதாக இராணுவம் அறிவித்திருக்கிறது.
நாட்டின் சார்பற்ற ஊடகங்களின் மீது மியான்மார் இராணுவம் குறிவைத்து மிரட்டும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக “எல்லைகளில்லாத ஊடகம்,” அமைப்புத் தெரிவிக்கிறது. இராணுவ அரசு அமைக்கப்பட்டதிலிருந்து இதுவரை சுமார் 100 ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், அவர்களில் 50 பேர் தொடர்ந்தும் பாதுகாவலில் விசாரணைக்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரியவருகிறது.
ஊடகவியலாளர்கள் நாட்டின் எதிரிகள் என்று இராணுவ அரசு குறிப்பிட்டு வருகிறது. அதனால், பெரும்பாலான ஊடகவியலாளர்கள் மறைவிலிருந்தே தமது வேலையைச் செய்துவருகிறார்கள். அவர்களுடைய வீடுகளை நள்ளிரவுகளில் சோதனை செய்யும் இராணுவத்தினர் தாம் தேடுபவர்கள் கிடைக்காவிட்டால் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களைக் கைது செய்து வருகிறார்கள் என்று மியான்மார் மக்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட விபரங்கள் குறிப்பிடுகின்றன.
சாள்ஸ் ஜெ. போமன்