அமெரிக்காவின் நடத்தையில் வஞ்சகம்- அவமதிப்பு – பொய்! பிரான்ஸின் அமைச்சர் காட்டம்.
ஆஸ்திரேலிய அணு நீர் மூழ்கி ஒப்பந்த விவகாரத்தில் அமெரிக்கா நடந்து கொண்ட விதம் வஞ்சகம் – அவமதிப்பு – பொய் கலந்தது என்று பிரான்ஸின் வெளிவிவகார அமைச்சர் சாடியிருக்கிறார். அது தொடர்பாக அமெரிக்க ராஜாங்கச் செயலாளர் அன்ரனி பிளிங்டனுடன் தான் இதுவரை பேசவில்லைஎன்றும் அவர் கூறியிருக்கிறார்.
நாங்கள் நெருங்கிய கூட்டாளிகள். கூட்டாளிகளோடு நாங்கள் ஒருபோதும் இவ்வாறு நடந்துகொள்ள மாட்டோம்.முக்கிய ஒரு பங்காளியுடன் இவ்வாறுமிருகத்தனமாக – கணிக்கமுடியாத குணாம்சத்துடன்-நடந்துகொள்ளமாட்டோம் என்று வெளிவிவகார அமைச்சர்Jean-Yves Le Drian ‘பிரான்ஸ் 2’தொலைக்காட்சி சேவைக்குத் தெரிவித்தார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோவின் முக்கிய பங்காளி நாடான பிரான்ஸ் அவமதிக்கப்பட்டிருப்பது நேட்டோவின் எதிர்காலம் தொடர்பான கேள்விகளையும் எழுப்பியுள்ளது.
பிரான்ஸின் கவலைகளுக்கு அமெரிக்காபதிலளிக்கும் என்று கூறியிருக்கிறது.இந்த வாரம் ஆரம்பமாகவுள்ள ஐ. நா.பொதுச் சபைக் கூட்டத்தை ஒட்டியதாக நியூயோர்கில் நடைபெறவுள்ள சந்திப்புகளில் பிரெஞ்சு அதிகாரிகளுடன் பேச்சுக்கள் நடத்தப்படும் என்று அமெரிக்க ராஜதந்திரிகள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, ஆஸ்திரேலியாவின் ‘ஸ்கை நியூஸ்’ சேவைக்குக் கருத்து வெளியிட்ட அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் பீற்றர் டட்டன் (Peter Dutton), ஒப்பந்தத்தைக் கிழிப்பதற்கு முன்பாக பிரான்ஸுடன் தமது நாடு “வெளிப்படையாகவும் நேர்மையுடனும் நடந்தது கொண்டது”என்று கூறியிருக்கிறார்.
இந்த விவகாரத்தில் பிரான்ஸின் எரிச்சல்களைப் புரிந்து கொள்வதாகக் கூறிய அவர், ஆஸ்திரேலிய அரசாங்கம் ஒப்பந்தம் குறித்த தனது கவலைகளை நேரடியாகப் பிரான்ஸிடம் தெரிவிக்காதபோதிலும் அவை பொது வெளியில் பகிரங்கமாக விவாதிக்கப்பட்டவையே
என்பதைச் சுட்டிக்காட்டினார்.
12 நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொள்வனவு செய்வதற்காக பிரான்ஸுடன் செய்து கொண்ட வர்த்தக ஒப்பந்தத்தை ஆஸ்திரேலியா திடீரென முறித்துக் கொண்டுஅமெரிக்கா மற்றும் இங்கிலாந்துடன்புதிதாக ஒர் ஒப்பந்தத்தை அது செய்துகொண்டுள்ளது. இதனால் பிரான்ஸுடனான அமெரிக்க, ஆஸ்திரேலிய உறவுகளில் பெரும் விரிசல் ஏற்பட்டிருக்கிறது.இரண்டு நாடுகளுக்குமான தனது தூதர்களை பாரிஸ் திருப்பி அழைத்திருக்கிறது.—
குமாரதாஸன். பாரிஸ்.