ஜப்பானின் பழம்பெரும் கட்சியின் தலைவராக ஒரு பெண் வரும் வாய்ப்பிருக்கிறதா என்பது விரைவில் தெரியவரும்.
குறுகிய காலமே பதவியிலிருந்துவிட்டு மீண்டும் தேர்தலில் போட்டியிடமாட்டேன் என்று அறிவித்த யோஷிஹீடெ சுகா நாட்டின் அரசியலில் பெரும் பரபரப்பைச் சமீப வாரங்களில் உண்டாக்கியிருக்கிறார். நீண்ட காலமாக நாட்டின் அரசியல் வானில் ஆக்கிரமிப்புச் செய்துவரும் பழம்பெரும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சியும் திடீரென்று ஒரு தலைவரைத் தெரிவுசெய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறது
1955 இல் ஸ்தாபிக்கப்பட்ட அந்தக் பழமைவாதக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் நாலு பேர் இறங்கியிருக்கிறார்கள். அவர்களில் இருவர் பெண்களாகும். இதுவரை ஆண்களாலேயே ஆளப்பட்டு வரும் ஜப்பானில் பெண்கள் அரசியலில் முக்கிய தலைமையைப் பெறுவது அரிது. இதுவரை என்றுமே அப்பதவிக்குப் பெண்கள் போட்டியிட்டதில்லை. கோனோ, கிஷீடா என்ற இரண்டு ஆண் வேட்பாளர்கள் பலரின் ஆதரவைப் பெற்றிருப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும் பெண் வேட்பாளர்களில் ஒருவரான சனா தக்கயீச்சி [Sanae Takaichi] பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறார். “Sanaenomics”என்ற பெயரில் தனது பொருளாதாரத் திட்டத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார் சனா. அவரை வேட்பாளராக முன்மொழிந்திருக்கிறார் பிரபலமாக இருந்த ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ ஆபே.
தனது உடல்நலக் கோளாறு காரணமாகப் பிரதமர் பதவியிலிருந்து இறங்கிய ஷின்சோ ஆபே மிகவும் ஆதரவு பெற்றவர். அவருடைய கொள்கைகள், கோட்பாடுகளையே பெரிதும் ஆதரிக்கும் சனாவுக்கு ஆபே முழுமனதுடன் ஆதரவு கொடுத்து வருவதாகக் குறிப்பிடப்படுகிறது. அக்கட்சியின் தலைவராக வருகிறவர் ஜப்பானின் அடுத்த பிரதமராவது பெரும்பாலும் நிச்சயம் என்றும் கருதப்படுகிறது.
கோனோ, கிஷீடா ஆகிய ஆண் வேட்பாளர்கள் இருவரும் ஜப்பானின் வெளிவிவகார அமைச்சர்களாக இருந்தவர்கள். அவர்களிடையே கோனோ இதுவரை மிகச் சிறிய வித்தியாசத்தில் அதிக ஆதரவுள்ளவராக இருக்கிறார். அவர் சாதாரண மக்களின் ஆதரவையும், இள வயதினரையும் ஈர்ப்பவராக இருந்து வருகிறார்.
சாள்ஸ் ஜெ. போமன்