தேர்தலில் ஜஸ்டின் மீண்டும் அதிக ஆதரவு பெற்றாலும், அவர் எதிர்பார்த்தது போல கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.
கொரோனாத் தொற்றுக்களின் நாலாவது அலை பரவும் நேரத்தில் மக்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பிய குற்றத்துக்காக கனடாவின் பிரதம் ஜஸ்டின் டுருடூவை மக்கள் தண்டித்திருக்கிறார்கள் என்றே நேற்று நடந்த தேர்தல் காட்டுகிறது. பாராளுமன்றத்தில் அறுதிப் பெரும்பான்மையான 170 இடங்களைப் பெறும் குறியில் தனது ஆட்சிக்காலத்தின் நடுவிலேயே தேர்தலை அறிவித்த டுருடூவின் கட்சி தொடர்ந்தும் உதிரிக் கட்சிகளின் உதவியுடன் தான் ஆட்சியமைக்கலாம் என்ற நிலைமை உருவாகியிருக்கிறது.
2015 இல் கனடாவில் நடந்த தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றுத் தனியாக ஆட்சியைக் கைப்பற்றியிருந்தது டுருடூவின் லிபரல் கோட்பாட்டுக் கட்சி. ஆனால், அதையடுத்த தேர்தலில் மக்கள் அதேயளவு ஆதரவை அவருக்குக் கொடுக்கவில்லை. அவர் நியூ டெமொகிரடிக் கட்சியுடன் சேர்ந்தே ஆட்சி அமைக்கவேண்டியதாயிற்று.
தனது ஆட்சிக்காலத்தில் மீண்டும் ஏறிக்கொண்டிருந்த மக்கள் ஆதரவை நம்பி பாதி ஆட்சிக்காலத்திலேயே தேர்தலை அறிவித்தார் ஜஸ்டின் டுருடூ. பொருளாதார முன்னேற்றம் மற்றும் கொவிட் 19 க்கு எதிரான தடுப்பூசியை நாட்டு மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பதில் காட்டிய வேகம் ஆகியவை அவருக்கு அந்த ஆதரவைக் கொடுத்திருந்தது.
தேர்தலை அவர் சமீபத்தில் அறிவித்தபோது இருந்த அந்த ஆதரவு விரைவிலேயே மாறி எதிர்க்கட்சியான கொன்சர்வட்டிவ் கட்சிக்கு ஆதரவு அதிகரித்தது. அந்த ஆதரவு படிப்படியாகச் சமமாகியதை தேர்தல் கணிப்பீடுகள் காட்டினாலும் டுருடூவின் கட்சியால் தேர்தல் பிரசாரம் மூலம் பெருமளவு உயர்த்த முடியவில்லை.அவர், சுய நலத்துக்காகக் கொரோனாப் பரவலுக்கிடையே தேர்தலை அறிவித்ததாக ஒரு சாராரிடையே கோபத்தை உண்டாக்கியிருந்தார்.
பெரும்பாலான வாக்குகள் எண்ணப்பட்டதில் அவரது கட்சிக்கு 157 இடங்கள் கிடைக்கும் என்று தெரிகிறது. அதேயளவு இடங்களையே அக்கட்சி கடந்த தேர்தலிலும் கைப்பற்றியிருந்தது. அவரது ஆதரவுக் கட்சியான நியூ டெமொகிரட்டிக் கட்சி 28 இடங்களைப் பிடிக்க, எதிர்க்கட்சியான கொன்சர்வட்டிவ் கட்சி 123 இடங்களைக் கைப்பற்றும். 29 இடங்களைப் பிரெஞ்ச் மொழி பேசுகிறவர்களின் கட்சி 29 இடங்களைப் பெறுகிறது.
“வாக்காளர்கள் எங்கள் கட்சியின் மீதான நம்பிக்கையை மீண்டும் காட்டி எங்களை நாட்டுக்குச் சேவை செய்ய அனுப்பியிருக்கிறார்கள். இதையே நாம் எதிர்பார்த்தோம்,” என்று தனது நன்றி நவிலலில் ஜஸ்டின் டுருடூ தெரிவித்தார்.
சாள்ஸ் ஜெ. போமன்