அல்ஜீரியப் போரில் கைவிடப்பட்ட ‘ஹார்கி’ முஸ்லீம் இனத்தவரிடம் மன்னிப்புக் கோரினார் மக்ரோன்!
பிரான்ஸிலும் அல்ஜீரியாவிலும் வசிக்கின்ற “ஹார்கிஸ்” எனப்படும் பூர்வீக முஸ்லீம் சமூகத்தவர்களை அரசுத்தலைவர் மக்ரோன் எலிஸே மாளிகையில் இன்று சந்தித்திருக்கிறார்.அங்குஅல்ஜீரிய சுதந்திரப் போரில் பிரான்ஸுக்கு உதவிய அல்ஜீரியர்களின் ஹர்கிஸ் நினைவேந்தல் விழாவில்அவர் உரையாற்றியிருக்கிறார்.
போரில் ஹார்கிகள் வழங்கிய பங்களிப்புகளையும் அவர்களுக்கு நேர்ந்த துன்பங்களையும் அங்கீகரிப்பதாகக் குறிப்பிட்ட மக்ரோன், ஹார்கிகள் மற்றும் அவர்கள் மனைவிமார் குழந்தைகள் விடயத்தில் பிரான்ஸ் தனது கடமைகளில் அலட்சியமாக நடந்துகொண்டது என்பதை ஒப்புக்கொண்டார். அதற்காக அவர் மன்னிப்புக் கோரினார்.
அவர்களுக்கு அங்கீகாரம் மற்றும் இழப்பீடுகளை வழங்கும் வகையில் சட்ட ஏற்பாடுகள் செய்யப்படும்எனவும் அவர் அங்கு அறிவித்தார். பிரான்ஸின் அல்ஜீரியக் காலனித்துவசரித்திரத்தின் இன்னொர் இருண்ட பக்கம் இது.1954 முதல் 1962 வரை நடந்த அல்ஜீரிய சுதந்திரப் போரின் போது சுதந்திரப் போராளிகளை எதிர்த்துப் போரிட்ட பிரான்ஸின் படைகளோடு இணைந்து சண்டையிட்ட லட்சக்கணக்கான அல்ஜீரிய முஸ்லிம்கள் “ஹார்கிகள்” (Harkis) எனப்படுகின்றனர்.
போரின் முடிவில் இரண்டு தரப்புகளினாலும் கைவிடப்பட்ட அவர்கள் மிருகத்தனமாக நடத்தப்பட்டனர். அவர்களைப் பாதுகாப்பதாக முன்னர் வழங்கிய வாக்குறுதிகளைப் பிரான்ஸ் கைவிட்டது. அல்ஜீரியசுதந்திரப் போராளிகளிடம் சிக்கிய ஆயிரக்கணக்கான ஹர்க்கி துணைப் படை வீரர்கள் படுகொலை செய்யப்பட்டனர். இறந்தவர்கள் போக எஞ்சிய ஹார்கிகளும் அவர்களது குடும்பத்தவர்களும் பிரான்ஸில் மிக இழிவான நிலையிலும் வசதிகளற்ற சூழ்நிலையிலும் முகாம்களில் அடைக்கப்பட்டனர்.
அல்ஜீரிய சுதந்திரப் போராளிகளாலும்பிரெஞ்சு அதிகாரத்தினாலும் கைவிடப்பட்ட பூர்வீக முஸ்லிம்களது சரித்திரத்தை பிரான்ஸில் வாழும் ஹர்க்கி சமூகத்தினர் இப்போதும் நினைவு கூர்ந்துவருகின்ற னர். 2016 இல் அப்போதைய அதிபர் பிரான்ஷூவா ஹொலன்ட் “ஹர்கிகளைக் கைவிட்டதற்கான பொறுப்பை பிரான்ஸ் ஏற்றுக்கொள்கின்றது” என்று அறிவித்தார்.
அதன் தொடர்ச்சியாகவே தற்போதுமக்ரோன் ஹார்கிகளுக்கு அங்கீகாரம் வழங்குவதாக அறிவித்திருக்கிறார்.உயிர்தப்பிய ஹார்கிப் படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்கள் அடங்கிய சுமார் 300 பேர் எலிஸே மாளிகையில் நடந்த விழாவில் கலந்து கொண்டனர். போரில் அவர்களது பங்களிப்பை யும் அவர்கள் அனுபவித்த துயரங்களையும் அங்கீகரித்துப் பொறுப்புக் கூறுகின்ற நடைமுறைகளில்”இது ஒரு முக்கியஅடி” என்று எலிஸே மாளிகை தெரிவித்துள்ளது. ஹார்கிகளது வரலாறு பிரான்ஸின் வரலாற்றில் இருந்து ஒருபோதும் பிரிக்கப்பட மாட்டாது என்றும் அது தெரிவித்துள்ளது.
பெரும் எண்ணிக்கையான ஹார்கிகள் குடியமர்த்தப்பட்ட பிரான்ஸின் தென் பகுதியில் அவர்களது நினைவு நாள்ஆண்டு தோறும் அனுஷ்டிக்கப்பட்டுவருகிறது. அல்ஜீரியப் போரில் ஹாக்கிகள் வழங்கிய பங்களிப்பு மற்றும் அதுதொடர்பான அங்கீகாரம் என்பன ஒருசட்டத்தின் மூலமாக உறுதிப்படுத்தப்படவேண்டும் என்று ஹார்கி மக்கள் அமைப்புகள் அதிபர் மக்ரோனிடம் கடிதம் மூலம் கேட்டிருந்தன.
பிரான்ஸ் தனது கடந்த கால காலனி ஆதிக்கத்தில் விடப்பட்ட தவறுகளைசீர்செய்யும் முயற்சியாக பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது.அல்ஜீரியாவில் தனது அதிகாரத்தை பிரான்ஸ் எவ்வாறு கையாண்டது என்பதை மதிப்பீடு செய்து அறிக்கை சமர்ப்பப்பதற்காக வரலாற்றுத்துறை நிபுணர் பெஞ்சமின் ஸ்டோரா (Benjamin Stora)என்பவரை மக்ரோன் நியமித்திருந்தார்.
றுவாண்டா இனப்படுகொலை,பொலினேசியா அணுகுண்டுப் பரிசோதனை,அல்ஜீரியப் போர் குற்றங்கள் போன்றபல விவகாரங்களில் பிரான்ஸின் கடந்தகாலத் தவறுகளைச் சீர்செய்யும் நோக்கிலான பல நடவடிக்கைகளை மக்ரோன் முன்னெடுத்து வருகிறார்.
குமாரதாஸன். பாரிஸ்