கொவிட் 19 தடுப்பூசி கொடுப்பதில் உலகளவில் முதலிடம் போர்த்துகாலுக்கு. பெருமை ஒரு இராணுவத் தலைவருக்கு.
தமது நாட்டின் பெரும்பான்மையினருக்குத் தடுப்பூசிகளிரண்டையும் கொடுத்ததில் உலகில் முதலிடம் பிடித்திருக்கிறது போர்த்துக்கால். நாட்டின் 84.4 % மக்கள் தமது தடுப்பூசிகளிரண்டையும் பெற்றிருக்கிறார்கள். போர்த்துக்கால் தனது குறியான 85 % விகித மக்களுக்குத் தடுப்பூசி கொடுக்கும் புள்ளியை விரைவில் அடைந்துவிடும். தனது நாட்டின் பெரும்பாலான கொரோனாக் கட்டுப்பாடுகளை அவர்கள் நீக்கியிருக்கியிருக்கிறார்கள்.
10.3 மில்லியன் குடிமக்களைக் கொண்ட நாடு போர்த்துக்கால். அதற்கடுத்ததாக தனது 80.8 % மக்களுக்கு எமிரேட்ஸும், 77.3 % மக்களுக்கு சிங்கப்பூரும் தடுப்பு மருந்துகளை முழுசாகக் கொடுத்திருக்கின்றன. 27 அங்கத்துவர்களைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியம் இதுவரை 61.6% மக்களுக்குத் தடுப்பூசிகளிரண்டையும் கொடுத்திருக்கிறது. உலகளவில் 32.2 % மக்களுக்கே இதுவரை கொவிட் 19 தடுப்பு மருந்துகள் கிடைத்திருக்கின்றன.
போர்த்துக்காலில் 891 பேர் புதனன்று கொவிட் 19 ஆளாகியிருக்கிறார்கள். இம்மாத ஆரம்பத்தில் அவ்வியாதிக்காக 621 பேர் மருத்துவசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்தார்கள். அத்தொகை வாராவாரம் குறைவடைந்து 426 ஆகியிருக்கிறது.
இவ்வருடம் பெப்ரவரி மாதத்தில் போர்த்துக்காலின் தடுப்பூசிகள் கொடுக்கும் திட்டத்தின் தலைமையைப் பொறுப்பெடுத்த அட்மிரல் ஹென்ரிக் குவேயா ஏ மேலோ[ Admiral Henrique Gouveia e Melo] தான் நாட்டின் இந்த வெற்றிக்குக் காரணம் என்று குறிப்பிடப்படுகிறது.
கடற்படை வீரரான குவேயா ஏ மேலோவுக்கு முன்னர் அப்பதவியில் ஒரு அரசியல்வாதி நியமிக்கப்பட்டிருந்தார். அவரது தலைமையில் “வேண்டியவர்களுக்குச் சலுகைகள்” கொடுக்கப்பட்டதாக விமர்சனங்கள் வெளியானதால் அப்பதவி கடற்படைத் தளபதியான குவேயா ஏ மேலோவிடம் கொடுக்கப்பட்டது.
அவர் இராணுவத்தினரைத் தனது ஆலோசகர்கள், உதவியாளர்களாக வைத்துக்கொண்டு நாட்டின் பல பகுதிகளிலும் எந்தெந்த இடங்களில், எப்படித் தடுப்பூசி கொடுக்கும் திட்டத்தை நிறைவேறலாமென்று ஒழுங்குசெய்துகொண்டு களத்தில் இறங்கி படு வேகமாக இதைச் சாதித்து முடித்திருக்கிறார். ஒழுங்குமுறையுடன் தொலைக்காட்சியில் தோன்றிப் பொது மக்களின் தடுப்பூசி பற்றிய கேள்விகளுக்கும் அவர் பதிலளித்து வருகிறார்.
அவரது வெற்றியைக் கவனித்து வேறு நாடுகளும் அதுபற்றி அவரிடம் ஆலோசனைகள் கேட்டிருக்கின்றன.
பொதுவாகவே போர்த்துக்கால் மற்றைய தொற்றுவியாதிகளுக்கான தடுப்பூசிகளைப் போடுவதிலும் ஐரோப்பாவில் முதலிடத்தில் இருக்கிறது. 95 % மக்கள் அவைகளைப் போட்டுக்கொள்கிறார்கள். கொவிட் 19 தடுப்பூசியை எதிர்ப்பவர்களும் போர்த்துக்காலில் மிகக்குறைவு என்று குறிப்பிடப்படுகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்