புனித நீரை நதிகளில் கலந்து சிறீலங்கா, இந்தியாவில் கொவிட் பெருநோயை அழிப்பேன் என்பவர் அந்த நோயால் மடிந்தார்.

சிறீலங்காவின் பிரதமர், அமைச்சர்கள், நட்சத்திரங்களை மந்திரித்துக் குணமாக்குவதாகக்  குறிப்பிட்டு வந்த எலியந்த வைட் என்ற பிரபல மாந்திரீகர் கொவிட் 19 ஆல் மரணமடைந்தார். அவர் தான் மந்திரித்த நீரை சிறீலங்கா, இந்தியா ஆகிய நாடுகளின் நதிகளில் கலந்துவிடுவதன் மூலம் அந்தப் பெருநோயை ஒழிக்கலாமென்றும் குறிப்பிட்டிருந்தார். 

2010 இல் இந்தியக் கிரிக்கெட் நட்சத்திரமான சச்சின் டெண்டுல்கர் தனக்கு முழங்காலில் ஏற்பட்ட பாதிப்புக்கு  எலியந்த வைட் தான் மருந்து தந்து குணமாக்கியதாகத் தெரிவித்திருந்தார். அதன் பின் அவர் கௌதம் கம்பீருக்கும் சிகிச்சை செய்ததாகக் குறிப்பிடப்பட்டது. 

அச்சமயத்தில் சிறீலங்காவின் மக்கள் ஆரோக்கிய அமைச்சராக இருந்த வன்னியாராச்சி அந்த மந்திரித்த நீரை நதிகளில் கலந்தார், தானும் பாவித்ததாகக் குறிப்பிட்டார். அதையடுத்த மாதங்களில் கொவிட் 19 ஆல் தாக்கப்பட்டு அவசரகால மருத்துவமனையில் சிகிச்சை பெறவேண்டியதாயிற்று. அமைச்சர் அதன் பின்னர் தனது பொறுப்புக்களிலிருந்து விடுவிக்கப்பட்டு வேறு பொறுப்புக்களைப் பெற்றார்.

தான் பல ஆயிரங்கள் வருடங்களுக்கு முன்னரான வைத்திய இரகசியங்களைப் பின்பற்றுவதாக வைட் குறிப்பிட்டு வந்தார். பிரபல மருத்துவர்களும், ஆயுர்வேத மருத்துவர்களும் எலியந்த வைட் ஒரு ஏமாற்றுக்காரன் என்று விமர்சித்து வந்தார்கள்.

வைட் அவ்வியாதிக்கான தடுப்பு மருந்தை எடுக்கவும் மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கொவிட் 19 ஆல் இறந்ததால் அதற்கான கட்டுப்பாடுகளுடன் வைட்டின் உடல் தகனம் செய்யப்பட்டது. 

எலியந்த வைட்டின் மரணத்துக்கு அஞ்சலி தெரிவித்த பிரதமர் மஹிந்த ராஜபக்சே, அவரது பெயர் நீண்டகாலம் போற்றப்படும் என்று குறிப்பிட்டார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *