“தடுப்பூசி போட்டுக்கொள்ளாத பிள்ளைகளெல்லாம் தொற்றுக்கு உள்ளாவார்கள்,” என்கிறார் பிரிட்டனின் தலைமை ஆரோக்கிய அலுவலர்.
பிரிட்டனில் கொவிட் 19 வேகமாகத் தொற்றிவருவது தற்போது பெரும்பாலும் 12 – 15 வயதானவர்களிடையே தான் என்கிறார் நாட்டின் தலைமை மக்கள் ஆரோக்கிய அலுவலர் கிறிஸ் விட்டி. கடந்த வாரம் அவரும் அவரது குழுவினரும் நாட்டின் சகல 12 – 15 வயதுள்ளவர்களுக்கும் தடுப்பு மருந்து கொடுப்பதென்று முடிவெடுத்திருக்கிறார்கள்.
கடந்த ஜூன் மாதத்திலிருந்து தினசரி சராசரி 20,000 பேர் கொரோனாத் தொற்றுக்கு உள்ளாகி வருகிறார்கள். அந்த எண்ணிக்கை சமீப நாட்களில் 34,500 ஆக அதிகரித்திருக்கிறது.
“தடுப்பூசியெடுக்காத 12 – 15 வயதுள்ளவர்கள் எப்படியேனும் தொற்றுக்குள்ளாவார்கள். அவர்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கும் முடிவு அவர்களுடைய ஆரோக்கியத்தை முன்வைத்தே எடுக்கப்பட்டது. அவர்களின் வீட்டிலிருக்கும் பலவீனமான வயதானவர்களையோ, அரசியல் நோக்கை முன்வைத்தோ அந்த முடிவு எடுக்கப்படவில்லை,” என்று அறுதியாகக் குறிப்பிடுகிறார் கிறிஸ் விட்டி.
பாடசாலைகளுக்குப் போகும் அந்த வயதுக் குழுமத்தினரிடையே தொற்று ஏற்படுவது எளிது, வேகமாகப் பரவுவது எளிது. நோய்வாய்ப்பட்டால் அவர்களில் ஒரு பகுதியினரின் கல்வி நீண்டகாலத்துக்குப் பாதிக்கப்படும். அதைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டே அவர்களுக்குத் தடுப்பு மருந்து கொடுக்கும் முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது.
சாள்ஸ் ஜெ. போமன்