அகதிகளால் நிறைந்திருந்த டெல் ரியோ பெரும்பாலும் வெறுமையாக்கப்பட்டுவிட்டது.
கடந்த வாரத்தில் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாநில எல்லை நகரமான டெல் ரியோவில் குவிந்த அகதிகளின் நிலைமை சர்வதேச ஊடகங்களில் பெருமளவு பேசப்பட்டது. அவர்களில் பெரும்பாலானோர் அரசியல் நிலைகுலைந்த ஹைட்டியிலிருந்து அமெரிக்காவை நோக்கி நல்வாழ்வு தேடி வந்திருந்த அகதிகளாகும். அவர்களில் பெரும்பாலானோரை அமெரிக்க அரசு வெளியேற்றிவிட்டது.
ஜோ பைடன் அரசு பதவிக்கு வந்ததிலிருந்தே அமெரிக்க அரசின் அகதிகள் பற்றிய கொள்கை எப்படியாக இருக்கும் என்பது தெளிவின்றியே இருந்து வருகிறது. ஒரு பக்கத்தில் முன்னரிருந்த அரசை விட மென்மையாக இருப்பேன் என்று குறிப்பிட்டுவிட்டு, பெரும்பாலும் அதே போன்ற நடத்தையையே அமெரிக்கா தொடர்வதாக அரசியல் அவதானிகள் விமர்சித்து வருகிறார்கள். இதுபற்றி ஜோ பைடனின் டெமொகிரடிக் கட்சியினருக்குள்ளே இருந்து ஜோ பைடன் மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
ஜோ பைடனின் வார்த்தைகளை நம்பியதால் தென்னமெரிக்க நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்குள் நுழைய முற்படும் அகதிகள் தொகை பெருமளவில் அதிகரித்திருக்கிறது. அதுபோலவே ஹைட்டியிலிருந்தும் பெரும் அகதிகள் அலையொன்று திடீரென்று அச்சிறிய எல்லை நகரை முற்றுக்கையிடவே அமெரிக்க அரசு எப்படிக் கையாள்வதென்று தெரியாமல் தடுமாறியது.
அதற்குத் தீர்வாகவே, அவர்களில் பெரும்பாலானோரை அமெரிக்கா விமானங்களின் மூலம் ஹைட்டிக்குத் திருப்பியனுப்பியிருக்கிறது. அவ்வகதிகள் எல்லைக்காவலர்கள் சிலரின் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தன.
கடந்த தினங்களில் பல விமானங்களில் அகதிகள் திரும்பியனுப்பிவைக்கப்பட்ட பின்பு மெக்ஸிகோவும் தனது நாட்டுக்குள் அவர்கள் திரும்பாமல் தடுத்து வருகிறது.
சாள்ஸ் ஜெ. போமன்