மரண தண்டனைகளை நிறைவேற்றுவதை அமெரிக்கா முழுவதுமாக நிறுத்தவேண்டுமென்ற அறுதி முடிவை எடுக்கும்படி ஜோ பைடனிடம் வேண்டுகோள்.

எண்பதுக்கும் மேற்பட்ட மனித உரிமைக்குழுக்கள் ஜோ பைடன் தனது முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகக் குறிப்பிட்ட மரண தண்டனைகள் வழங்குதலையும், நிறைவேற்றலையும் நிறுத்தவேண்டுமென்று கடிதங்கள் எழுதிக் கோரியிருக்கின்றன.

அமெரிக்க சரித்திரத்திலேயே என்றுமில்லாத அளவுக்கு அதிகமான மரண தண்டனைகள் நிறைவேற்றலைக் குறுகிய காலத்துக்குள் நடத்தியவர் டிரம்ப். தனது பதவிக் காலத்தின் கடைசி வாரத்தில் லிசா மொண்ட்கொமெரியின் மரண தண்டனையை நிறைவேற்றியபோது எழுபது வருடத்தின் பின்னர் முதல் தடவையாக அமெரிக்கா ஒரு பெண்ணின் மரண தண்டனையை நிறைவேற்றியது. 

https://vetrinadai.com/news/higgs-dustin-execution-usa/

நிறவாத, இனவாத, பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அமெரிக்காவின் நீதிபரிபாலிப்பில் இருக்கக்கூடாது என்பதைப் பல தடவைகள் டெமொகிரடிக் கட்சியினர் குறிப்பிட்டிருக்கின்றனர். அப்படியான சமுதாக ஏற்றத்தாழ்வுகளின் காரணமாகவே அமெரிக்காவில் பெரும்பான்மையாகச் சிறையிலிருப்பவர்கள் கறுப்பினத்தவர்கள், மரண தண்டனைக்குள்ளாபவர்கள் கறுப்பினத்தவர்கள், பொதுவாகவே சிறைத் தண்டனைக்குள்ளாகிறவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தின் பின் தங்கியவர்கள் என்று ஆதாரத்தோடு பல தடவைகள் ஜோ பைடன் குறிப்பிட்டிருப்பதை அவருக்கு எழுதியிருக்கும் மனித உரிமை அமைப்புக்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. 

இந்தியானாவில் இருக்கும் டிரம்ப்பின் கடைசி ஆறு மாத காலத்தில் 13 மரண தண்டனைகள் நிறைவேற்றப்பட்ட Federal Correctional Complex in Terre Haute, கட்டடத்தை ஜோ பைடன் முழுவதுமாக இடித்துத் தள்ளுவதுடன் மரண தண்டனைகள் விதிக்கலாகாது என்ற செய்தியை நீதிபதிகள் புரிந்துகொள்ளச் செய்யவேண்டும். அத்துடன் அரச வழக்கறிஞர்கள் கைதிகளெவருக்கும் மரண தண்டனை கோரலாகாது என்ற ஜனாதிபதி முடிவைக் கொண்டுவரவேண்டும். ஏற்கனவே மரண தண்டனை விதிக்கப்பட்டுக் காத்திருப்பவர்களுடைய தண்டனைகளை ஆயுள் தண்டனைகளாக மாற்றவேண்டும். அத்துடன் தனது பதவிக்காலத்தில் எடுக்கும் நடவடிக்கைகள் மூலம் எதிர்காலத்து ஜனாதிபதிகளெவரும் மீண்டும் மரண தண்டனைகளை அமுலுக்குக் கொண்டுவராமல் செய்யவேண்டும் என்றும் ஜோ பைடனிடம் கோரிக்கைகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

“ஜோ பைடன் எடுக்கவேண்டிய கோட்பாட்டு முடிவுகள் பல இருக்கின்றன. மரண தண்டனை பற்றிய முடிவுகளும் அவைகளுள் அடங்கும். கோரிக்கை வைத்திருக்கும் அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு அதற்கான நேரத்தை வழங்கவேண்டும்,” என்று ஜோ பைடனின் வெள்ளை மாளிகைக் காரியதரிசியொருவர் பதிலளித்திருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *