சந்தையிலிருந்து வந்ததா, பரிசோதனைச் சாலையிலிருந்து வந்ததா என்று புலனாய்ந்து தெரிவியுங்கள் – ஜோ பைடன்

கொவிட் 19 தொற்றுவியாதியைப் பரப்பும் கிருமிகளின் மூலம் எது என்பது பற்றிய பலவிதமான கருத்துக்களும் இருக்கின்றன. அவைகளில் முக்கியமான ஒன்றாக சீனாவின் வுஹான் பரிசோதனைச் சாலையில் தயாரிக்கப்பட்ட “கிருமி ஆயுதம்” தான் அது என்று, அவை தற்செயலாகவோ, திட்டமிட்டோ வெளியே பரவின என்பது குறிப்பிடப்படுகிறது. அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் அது சீனா மீதான சர்வதேச வெறுப்பை மேலும் அதிகரிக்கும் அரசியலாகவும் மாறும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

வுஹான் நகரத்தில் பல விலங்கினங்கள் உயிருடன் இறைச்சிக்காக விற்கப்படும் சந்தையில் தான் அக்கிருமியின் தடங்களை இதுவரை கவனிக்க முடிந்திருக்கிறது. அந்தச் சந்தைக்கு அது எப்படி வந்தது என்பதைப் பற்றிப் பல ஆராய்ச்சியாளர்களும் அறிந்துகொள்ள முனைந்தும் தெளிவான பதிலில்லை.

இன்னொரு பக்கத்தில் அதன் மூலம் சீனாவில் தான் நோயாக முதலில் காணப்பட்டிருக்கிறது என்பது தெளிவான நிலை உள்ளது. அதனால் உலக நாடுகளின் வேண்டுகோளுக்கிணங்கள் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்பு சீனாவுக்குச் சென்று விசாரணைகளை நடாத்தியது. அவர்களது அறிக்கையின்படியும் எவ்வித தெளிவும் கிடைக்கவில்லை. ஆனால், சீனா தனது ஆரம்பகால கொரோனாத் தொற்று நோயாளிகளின் முழு விபரங்களையும் கொடுக்க மறுத்து வருவது பல சந்தேகங்களை அந்த நாட்டின் மீது உண்டாக்கி வருகிறது.

சீனாவின் மீதான அந்தச் சந்தேகங்கள் அடிக்கடி வெவ்வேறு கோணங்களிலிருந்தும் வரும் திரிபுபடுத்தப்பட்ட, பொய்யான வதந்திகளால் எது உண்மையான செய்தி என்று அறியமுடியாமல் குழப்பப்பட்டிருக்கின்றன. அவைகளிலொன்றாக சமீப நாட்களில் அமெரிக்காவின் புலனாய்வுத்துறை அறிக்கையொன்று வுஹான் பரிசோதனைச்சாலையொன்றில் பணியாற்றியவர்களிடையே கொவிட் 19 அடையாளங்கள் அந்த நோய் பரவ முன்னரே ஏற்பட்டிருந்தது என்கிறது. 

அதனால் மீண்டும் கொரோனாக்கிருமிகளின் மூலம் பற்றிய சர்ச்சை எழுந்திருக்கிறது. இதுவரை அதுபற்றி எடுக்கப்பட்டிருக்கும் புலனாய்வுத்துறை நடவடிக்கைகளில் தனக்குத் திருப்தி இல்லை என்று குறிப்பிட்டிருக்கும் ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் புலனாய்வுத்துறையிடம் அதுபற்றி விசாரணை செய்து 90 நாட்களில் தனக்கு அறிக்கை சமர்ப்பிக்கும்படி கேட்டுக்கொண்டிருக்கிறார். அதற்காகப் புலனாய்வுத்துறையினர் தமது முயற்சியை இரட்டிப்பாக்கவேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *