“ஆக்கிரமித்த பகுதிகளை விட்டு இஸ்ராயேல் வெளியேற ஒரு வருட அவகாசம்,” கொடுப்பதாகச் சூளுரைக்கிறார் அப்பாஸ்
நியூ யோர்க்கில் நடந்துவரும் ஐ.நா-பொதுச்சபைக்காகத் தொலைத்தொடர்பு மூலம் உரையளித்தால் பாலஸ்தீன ஜனாதிபதி முஹம்மது அப்பாஸ். அவ்வுரை மூலம் அவர் “இஸ்ராயேல் 1967 எல்லைக்குப் பின்னர் ஆக்கிரமித்த பாலஸ்தீனப் பிரதேசங்களை விட்டு வெளியேற ஒரு வருடம் அவகாசம் கொடுப்பேன், இல்லையேல் அந்த நாட்டைத் தொடர்ந்தும் அங்கீகரிப்பதில்லை,” என்று சூளுரைத்தார்.
“இன அழிப்பு”, “வெவ்வேறு இனங்களுக்கு வெவ்வேறு உரிமைகள்” போன்றவைகளை இஸ்ராயேலின் அரசு கடைப்பிடித்து வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். ஐக்கிய நாடுகள் சபையினால் ஏற்படுத்தப்படும் சர்வதேச அமைதி மாநாடு ஒன்றில் பங்குபற்றவும் வரும் ஒரு வருட காலத்துக்குத் தொடர்ந்து பேச்சுவார்த்தைகள் ஈடுபட்டு இரண்டு நாடுகள், இரண்டு தலைநகரங்கள் என்ற ரீதியில் ஒரு அறுதித் தீர்வைக் காண ஒத்துழைக்கத் தான் தயாரென்றும் அப்பாஸ் குறிப்பிட்டார்.
1967 இன் பின்னர் இஸ்ராயேல் தனது எல்லைகளை விஸ்தரித்துக்கொண்ட படங்களைத் திரையில் காட்டிய அவர், “பாலஸ்தீனர்கள் தமது நிலம் அபகரிக்கப்பட்டதற்காகச் சர்வதேச நீதிமன்றத்தில் நீதிகேட்கவும் தயாராகிறார்கள்,” என்று குறிப்பிட்டார்.
அந்த உரை பற்றிக் கருத்துத் தெரிவித்த ஐ.நா-வுக்கான இஸ்ராயேலின் தூதுவர் “உண்மையிலேயே அமைதியான தீர்வை எதிர்பார்ப்பவர்கள் ஐ.நா போன்ற சபைகளில் மிரட்டல் விடுவதில்லை,” என்றார்.
சாள்ஸ் ஜெ. போமன்