தமது கொவிட் 19 தடுப்பு மருந்துகளை வெனிஸுவேலா, வியட்நாம் நாடுகளுக்கு அனுப்பியது கியூபா.

அமெரிக்காவின் பல தடைகளுக்கு மத்தியில் தமது தேவைக்குத் தடுப்பு மருந்துகளை வாங்கவோ, இறக்குமதி செய்யவோ முயல்வது குதிரைக்கொம்பு என்பதைப் புரிந்துகொண்டு தமக்குத் தேவையான மருந்துகள், தடுப்பு மருந்துகளை உள்ளூரிலேயே கண்டுபிடிக்க, தயாரிக்க வசதிகளை ஏற்படுத்திக்கொண்ட நாடு கியூபா. அவ்வரிசையில் கொவிட் 19 தடுப்பு மருந்துகளையும் கண்டுபிடித்திருப்பதாகச் சில மாதங்களுக்கு முன்னரே கியூபா அறிவித்திருந்தது.

சுற்றுலாத்துறையைத் தமது பொருளாதாரத்தின் அடிக்கற்களில் ஒன்றாகக் கொண்ட கியூபாவிலும் கொரோனாத் தொற்றுக்கள் உண்டாகின. 7,279 இறப்புகளும் 860,800 தொற்றுக்களும் அங்கே உருவாகியிருந்ததாகக் கியூபா அறிவித்திருந்தது.

தாம் கண்டுபிடித்த தடுப்பு மருந்தைப் பரிசோதனைகளில் ஈடுபடுத்தி அவை 90 % அக்கொடும் வியாதியால் இறப்பு வராதிருக்க உதவுவதாகவும் கியூபா தெரிவித்திருந்தது. அத்துடன் அதை உலக நாடுகளிடையே விற்பனை செய்யவும் திட்டமிட்டிருக்கிறது கியூபா. அதற்கான முயற்சிகளிலொன்றாக அத்தடுப்பு மருந்தின் விபரங்களைக் கடந்த வாரம் உலக மக்கள் ஆரோக்கிய அமைப்புக்கு அனுப்பிவைத்திருக்கின்றன. அந்த அமைப்பின் அங்கீகாரம் பெற்ற தடுப்பு மருந்துகளையே உலக நாடுகள் கொள்வனவு செய்யும்.

வெனிசூவேலா, வியட்நாம் ஆகிய நாடுகள் கியூபாவின் “அப்டாலா”  தடுப்பு மருந்துகளைக் கொள்வனவு செய்திருக்கின்றன. மூன்று தடுப்பூசிகள் கொண்ட அத்தடுப்பு மருந்துகள் வியட்நாமுக்குச் சென்றடைத்திருப்பதாகக் கியூபாவின் ஜனாதிபதி மிக்கேல் டயஸ் கனஸ் டுவீட்டியிருக்கிறார்.

உலகின் முதல் நாடாக கியூபா தன் தடுப்பு மருந்தை 2 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகளுக்கும் கொடுக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. நவம்பர் மாதத்தினுள் நாட்டின் 90 % விகித மக்களுக்குத் தடுப்பு மருந்துகளைக் கிடைக்கச் செய்வது கியூபாவின் குறியாகும்.

சாள்ஸ் ஜெ. போமன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *