சுவிஸ் முதியவரது மரணத்துக்கு ஊசி காரணமல்ல: மருத்துவர்கள் விளக்கம்

சுவிற்சர்லாந்தின் லூசேர்னில் (Lucerne) முதுமை நோய்ப் பராமரிப்பகம் ஒன்றில் வயோதிபர் ஒருவர் வைரஸ் தடுப்பூசி ஏற்றப்பட்டு ஐந்து நாட்களின் பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுவிஸின் மத்திய கன்ரன் பிரதேசமாகிய லூசேர்ன் அதிகாரிகள் இந்த மரணம் தொடர்பாக மேலதிக தகவல்களை வெளியிடவில்லை.சுவிஸில் கடந்த வாரம் முதல் தடவை தடுப்பூசி ஏற்றப்பட்டவர்களில் ஒருவரான 91 வயதான அந்த வயோதிபர் ஏற்கனவே பல்வேறு தீவிர நோய்களுக்காகப் பராமரிக்கப்பட்டுவந்தவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

‘பைசர் – பயோஎன்ரெக்’ வைரஸ் தடுப்பூசிக்கும் இத்தகைய அரிதான மரணங்களுக்கும் சாத்தியங்கள் மிகக் குறைவு என்று சுவிஸ் மருந்துக்கட்டுப்பாட்டு நிபுணர்கள் வயோதிபரது மரணம் தொடர்பாக விளக்கமளித்துள்ளனர்.

“கொரோனா தடுப்பூசியின் பக்க விளைவுகள் தீவிரமாகக் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. நோய்களுக்கோ அன்றி மரணத்துக்கோ தடுப்பு மருந்து காரணமாக இருப்பது நிரூபிக்கப்படவில்லை. அதற்கான வாய்ப்புகள் மிக அரிது”- என்று சுவிஸ் மருந்துக் கட்டுப்பாட்டு ஏஜென்சி “சுவிஸ்மெடிக்” (Swissmedic) தெரிவித்துள்ளது. ஒருவருக்கு நோய் மற்றும் முதுமை காரணமாக இயல்பாக நிகழ்கின்ற மரணம் தடுப்பூசி ஏற்றப்பட்ட காலப்பகுதியிலும் இடம்பெறலாம்.

ஏற்கனவே உயிராபத்தான நிலையில் இருந்தவர்களுக்கு ஊசி ஏற்றப்பட்ட நாள்களில் மரணங்கள் நிகழலாம். அத்தகையோர் மரண ஆபத்தை ஏற்கனவே நெருங்கியவர்கள். தடுப்பூசி ஏற்றிய மறுநாளே மரணம் தற்செயலாக நிகழ வாய்ப்பிருக்கிறது.துல்லியமான காரணங்களை அறியாமல் ஒரு முடிவுக்கு வந்துவிடக்கூடாது.-இவ்வாறு “சுவிஸ்மெடிக்” ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

குமாரதாஸன். பாரிஸ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *