ஜப்பானின் அடுத்த தலைவர் பெயர் பூமியோ கிஷீடா [Fumio Kishida]!
ஜப்பானின் ஆளும் கட்சியான லிபரல் டெமொகிரடிக் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பதற்கான தேர்தலில் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் பூமியோ கிஷீடா வெற்றிபெற்றிருக்கிறார். 64 வயதான கிஷீடா தற்போது நாட்டின் பிரதமராக இருக்கும் யொஷிஹீடோ சுகாவுக்கு எதிராகக் கடந்த முறைக் கட்சித் தலைவர் போட்டியில் நின்று தோல்வியுற்றவராகும்.
கடந்த சுமார் இருபது வருடங்களாக ஜப்பானில் நடைமுறைப்படுத்தப்பட்ட தனியார் நிறுவனங்கள் சார்பான பொருளாதாரத்திலிருந்து நாட்டை மாற்றப்போவதாகக் குறிப்பிட்டிருக்கிறார் கிஷீடா. கொரோனாக் காலக் கட்டுப்பாடுகளால் சுருங்கி, முடங்கியிருக்கும் ஜப்பானின் பொருளாதாரத்தை மீண்டும் நிலை நிறுத்தக் கஜானாவிலிருந்து பணத்தை வெளியே விடப்போவதாக கிஷீடா குறிப்பிட்டிருக்கிறார்.
பழமைவாத ஜப்பானிய சமூகத்தினிடையே எழுந்திருக்கும் இரண்டு கேள்விகளான ஓரினத் திருமண அங்கீகரிப்பில் கிஷீடா இன்னும் தெளிவான முடிவை எடுக்கவில்லை.
இன்னொரு பிரச்சினையான திருமணம் செய்துகொள்பவர்கள் ஜப்பானில் ஒரே குடும்பப்பெயரைக் கொண்டிருக்கவேண்டும் என்பதை மாற்றித் தமது கல்யாணத்துக்கு முன்னைய பெயரைக் கொண்டிருக்கலாம் என்பதிலும் அவர் தெளிவான முடிவை எடுக்கவில்லை. எனவே அவரது தலைமையில் ஜப்பானில் பெரிய சமூக மாற்றங்கள் உண்டாகுமென்று எதிர்பார்க்கவில்லை என்கிறார்கள் அரசியல் அவதானிகள்.
சாள்ஸ் ஜெ. போமன்