சிங்கப்பூரில் வாழ்பவர்களின் சனத்தொகை பெருமளவில் வீழ்ச்சியடைந்திருக்கிறது.
சிங்கப்பூர் மக்கள், வெளிநாட்டுத் தொழிலாளர்கள், குடியுரிமை உள்ளவர்கள் சகலரிடையேயும் எண்ணிக்கை குறைந்திருப்பதாக நாட்டின் வருடாந்தரச் சனத்தொகை பற்றிய விபரங்களின் அறிக்க தெரிவிக்கிறது. 1950 க்குப் பின்னரான நாட்டின் மொத்த மக்கள் தொகை எண்ணிக்கை வீழ்ச்சியில் இத்தொகையே பெரியதாகும்.
2020 இல் 5.69 மில்லியன் பேராக இருந்த சிங்கப்பூரின் மக்கள் தொகை 4.45 மில்லியனாகக் குறைந்திருக்கிறது. இது 4.1 % சனத்தொகை வீழ்ச்சியாகும். அதற்கு முந்தைய வருடம் 0.3 % ஆலும் 1980 இல் 0.1 % ஆலும் சிங்கப்பூரின் சனத்தொகை வீழ்ச்சியடைந்திருக்கின்றன.
மொத்தச் சனத்தொகையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணம் குடிமக்களல்லாதவர்களின் எண்ணிக்கை 10.7 % ஆல் குறைந்ததாகும். அங்கே வெளி நாட்டவர்களுக்கான வேலைவாய்ப்புக்கள் இதற்கு முந்தைய வருடத்திலும் குறைந்ததால் சிங்கப்பூரின் குடிகள் அல்லாதோரின் எண்ணிக்கை 2.1 % ஆல் குறைந்திருந்தது. அந்த நாட்டுக்கு வேலை வாய்ப்புக்காக வந்து வாழ்பவர்களும் அவர்களுடைய குடும்பத்தினரும் நாட்டின் மொத்தக் குடிமக்களில் 20 % ஆகும்.
சிங்கப்பூர் குடிகளின் எண்ணிக்கை 0.7 % ஆல் வீழ்ச்சியடைந்திருக்கிறது. கடந்த வருடத்தை விடக் குறைந்த அளவிலேயே சிங்கப்பூர் புதியவர்களுக்குக் குடியுரிமை, வேலைவாய்ப்புக் குடியுரிமை ஆகியவற்றை வழங்கியிருக்கிறது.
பிள்ளை பெறுதல் குறைவதும், நாட்டின் குடிமக்களில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும் இதற்குக் காரணமாக இருப்பினும் கொரோனாக் கட்டுப்பாடுகள் அதனால் நாட்டில் ஏற்பட்ட முடக்கங்கள் ஆகியவையே குடிமக்கள் எண்ணிக்கையில் பெரும் வீழ்ச்சி உண்டாவதற்குக் காரணம் என்கிறது அரசு.
சாள்ஸ் ஜெ. போமன்